மதுரையிலிருந்து இராமநாதபுரத்தின் – அழகன்குளம் துறைமுகத்துக்குச் செல்லும் பண்டைய வணிகப் பாதையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி என்ற ஊரின் கிழக்கே சுமார் ஒரு கி.மீ தொலைவில், மணலூர் கண்மாயின் மேற்கரையில் உள்ள பள்ளிச்சந்தைத் திடல் என்ற பெயரிலான மண்மேட்டில் இவ்வகழாய்வு தொடங்கப்பட்டது. இவ்விடத்தைச் சுற்றி நிலத்தை உழும்போது பல்வேறு தொல்லியல் எச்சங்கள் கிடைத்துவந்த நிலையில், தரைமட்டத்திலிருந்து இரண்டரை மீட்டர் உயரத்தில் அவ்வளவாக பாதிப்புக்குள்ளாகாது இருந்த இம்மேடு ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.தற்பொழுது அகழாய்வு செய்யப்பட்டுவரும் இடம் 3.5 கி.மீ சுற்றளவுடன் 80 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. தொன்மையான ஊர்களான கொந்தகை, மணலூர் மற்றும் அகரம் ஆகியவையும் இப்பகுதியோடு தொடர்ச்சியுற அமைந்துள்ளன.
முதலமைச்சர்
திரு. மு. க. ஸ்டாலின்
மனிதகுலத்தின் தொல்நாகரிக இனமாம் நம் தமிழினத்தின் பழம்பெருமையை விளக்கும் கீழடி அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கும் பெரும் பேற்றை இன்று நான் பெற்றேன். ஆற்றங்கரை நாகரிகத்தின் ஆதிமுகமான வைகைக் கரையில் அமைந்திருந்த நகரத்தின் வயது 2,600 ஆண்டுகள். அகழாய்வில் அகலமாய்த் தோண்டத் தோண்ட எண்ணிலடங்காப் புதையல்களை எடுத்து வருகிறோம். கல் மணிகள் முதல் தங்க அணிகலன்கள் வரை கிடைத்திருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள் துணையோடு நாம் பேசிவந்த அனைத்துக்கும் மேலும் அசைக்கமுடியாச் சான்றுகள் கிடைத்த இடம் கீழடி. இவை அனைத்தையும் அருங்காட்சியகமாக ஆக்கி வைத்திருக்கிறது நமது தமிழ்நாடு அரசு. ஈராயிரம் ஆண்டுக்கும் முந்தைய தமிழர் வரலாற்றின் சின்னமாகக் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் வந்து பார்க்கும் காட்சியகமாக அமைந்துள்ளது. காலத்தே பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் அழைத்துச் செல்லப் போகிறது. வரலாறு படிப்போம். வரலாறு படைப்போம்!
அமைச்சர்
தங்கம் தென்னரசு
நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறைத்துறை அமைச்சர்
Lorem ipsum dolor sit, amet consectetur adipisicing elit. Voluptatem quos, quibusdam voluptates sed minima, eaque labore ut est non ex doloremque impedit! Ullam velit, sequi voluptas voluptate aperiam voluptatum tenetur maiores aliquam eum beatae labore, molestias et adipisci hic, atque nam! Doloremque at neque exercitationem iusto obcaecati quia fuga voluptatem, velit optio unde corrupti perferendis vero quisquam fugiat autem corporis eius blanditiis. Ex vero exercitationem nam commodi quae, minus expedita accusamus officia earum maiores dolor eligendi eveniet aperiam tempore dignissimos beatae dolores ipsam adipisci? Voluptate pariatur, cupiditate facere vero laudantium aliquid eaque libero impedit, laboriosam tenetur consectetur, non molestiae fugiat earum atque dolorem consequatur dignissimos aperiam dicta quasi recusandae. Dignissimos, provident! Quae adipisci officiis est sint iure aut veniam, numquam assumenda perspiciatis voluptatem repudiandae doloremque qui commodi et. Nesciunt dicta dolorem minima itaque officia id eos nulla beatae. Placeat amet aliquam exercitationem quia accusantium aut sunt quasi. Earum sequi ipsam tempora aspernatur perferendis accusantium animi autem dicta, expedita quis nihil ut laborum commodi quae, deserunt necessitatibus doloremque fuga adipisci. Consequuntur error ratione recusandae ipsum harum dolore, culpa odit, officiis debitis quidem quibusdam, obcaecati ducimus quaerat fuga voluptas enim modi quia. Doloribus, et? Adipisci laudantium blanditiis nemo sapiente fuga rerum a!
திரு. த. உதயச்சந்திரன். இ,ஆ,ப.,
இந்திய ஆட்சிப்பணி அலுவலர் மற்றும் தற்போதைய தமிழக அரசின் தொல்லியல் ஆணையர்.
நமது பழமையைத் தேடிடும் முடிவில்லாப் பயணமே தொல்லியல். நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற கருவிகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஊடாக மானுட சமூகம் பெற்ற வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே தொல்லியல் துறை இயங்கி வருகிறது. மூதாதையர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சிறு கற்கருவிகள், சக்கரம் மற்றும் தொல்பொருட்களில் இருந்துதான் நவீன கருவிகள் உருவாகத் தொடங்கியதோடு மனித வளர்ச்சிக்கும் அடிகோலியது. தொல்லியல் அகழாய்வுகள் புதையலைத் தேடும் சிறு விளையாட்டல்ல. அது விடை தெரியாக் கேள்விகளுக்கான உண்மையைத் தேடும் தொடர் பயணம். தொல்பொருட்களை முறையாக வகைப்படுத்தி பொருள்கொள்வதன் முலம் மனிதனின் பரிணாம வளர்ச்சியை தொல்லியல் வல்லுநர்களால் கணிக்க முடியும். அகழாய்வுகளை மேற்கொள்வதற்கு கண்டறிதல் முதல் பொருள் விளக்கம் அறிதல் வரை பல்வேறு தொழில்நுட்பத் திறன்கள் தேவைப்படுகின்றன. கடந்த காலம் குறித்த சிந்தனைகளில் புதுமை வழிகளை ஆராய்வதும், தகவல்களைச் சேகரிப்பதும், அறிவை அதிகரிப்பதும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் அறிவின் அடித்தளத்தை விரிவாக்கி பண்டைய காலம் பற்றிய புரிதலை மேம்படுத்தி ஒவ்வொருவரின் ஆர்வத்தையும் கற்பனையையும் தன் வசப்படுத்திட இயலும். இப்பெரு முயற்சியில், மும்பையிலுள்ள இந்திய புவிகாந்தவியல் நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு நிறுவனம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வுத் துறை போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து தரை ஊடுருவல் தொலையுணர்வி மதிப்பாய்வு (Ground Penetrating Radar Survey), காந்த அளவி மதிப்பாய்வு (Magnetometer Survey), ஆளில்லா வான்வழி வாகன மதிப்பாய்வு (Unmanned Aerial Vehicle) போன்ற பல்வகையான தொழில்நுட்பங்களைப் பின்பற்றி அவற்றின் மூலம் தொல்லியல் இடத்தை அடையாளம் காண்பது மற்றும் முறையான தொல்லியல் தளங்கள் மற்றும் அகழாய்வு பணிகள் மேற்கொள்வது என சீரிய நடவடிக்கைகளில் தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது. தனிச் சிறப்பான பிரிவுகளின் மதிப்பு வாய்ந்த பங்களிப்பினை ஆழமாகப் பகுத்தாய்ந்து தொல்லியல் கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் தொல்-தாவரவியல், மூலக்கூறு உயிரியல், மக்கள் மரபியல், சுற்றுச்சூழல் தொல்லியல் மற்றும் மொழியியல் தொல்லியல் போன்ற துறைகளின் வல்லுநர்களுடன் இணைந்து ஒத்துழைத்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தொல்லியல் மற்றும் நமது மரபு குறித்தான ஆர்வம் தமிழ்நாட்டில் தற்போது புத்தாக்கம் பெற்றுள்ளது. எனவே, கடந்த காலத்தைப் பற்றி கற்கவும், கண்டறியவும் அக்கறை கொள்ளவும் நமது பன்முகம் கொண்ட வளமையான மரபினை அறிந்து கொள்ளவும், அதன்மூலம் நமது மேன்மைக்கும் அறிவுக்கும் வளம் சேர்த்து இறுதியாக தமிழ்நாட்டின் வரலாற்றை உலக அரங்கில் நிலைநிறுத்தும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன என்று உறுதியாகக் கூறிட முடியும். புதுச்சேரி மத்தியப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் கா. ராஜன், அவர்கள் இந்த பதிப்பினை நுட்பமாகத் திருத்தி வழங்கியதோடு செறிவான முன்னுரையும் வழங்கியுள்ளார் அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். பத்மஸ்ரீ பேராசிரியர் திலீப் கே. சக்ரவர்த்தி அவர்களுடைய அன்பும் ஊக்கமும் பாராட்டத்தக்கது. தொல்லியலில் சிறந்த அணுகுமுறையைக் கையாளுவதற்கு துணை நின்ற PAMA ஆய்வு மையத் தலைவர் திரு பி.ஜெ. செரியன் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. நம் பழமையை வெளிக்கொணர, இந்தப் பயணம் ழுழுவதும் வழிகாட்டியாக விளங்கிய அனைத்து அறிஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
பேராசிரியர்
திரு. கா.ராஜன்
வரலாற்றுத்துறை மத்திய பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி
கீழடி அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட தொல்பொருட்கள் பொதுமக்களிடையே மிகப்பெரிய அளவிலான ஆர்வத்தையும், அறிஞர்களிடையே அறிவுசார் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது. அரிக்கமேடு, அழகன்குளம், காவேரிப்பட்டினம், உறையூர், கரூர், கொடுமணல், பொருந்தல், தாண்டிக்குடி, கொற்கை மற்றும் தமிழகத்திலுள்ள பிற தொடக்க வரலாற்று காலத்தைச் சார்ந்த இடங்களிலும், கேரளாவில் உள்ள பட்டணம் (முசிறிபட்டினம்) அகழாய்விலும் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்களோடு கீழடி தொல்பொருட்கள் ஒத்திசைவு பெற்றுத் திகழ்கின்றன. எனினும், ஒவ்வொரு அகழாய்விலும் அவை அமைந்துள்ள சூழலியல், நிலவியல் தன்மை, இயற்கை வளங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்தன்மை பெற்றுத் திகழ்கின்றன. இவ்வகையில், தமிழ்நாட்டிலுள்ள தொடக்க வரலாற்று காலத்தைச் சேர்ந்த பிற தொல்லியல் இடங்களில் கிடைக்காத செங்கல் கட்டுமானங்கள் அதிக அளவில் கீழடி அகழாய்வில் வெளிப்பட்டதே இவ்வகழாய்வின் தனித்தன்மையாகும். மேலும், இந்த தனிச் சிறப்புக்கு கூடுதல் வலுசேர்க்கும் வண்ணம் காலத்தால் முந்தைய தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்பு பெற்ற பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவை பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளன என்றால் மிகையாகாது. நகரமயமாதல், தமிழி எழுத்தின் காலம் ஆகிய இவ்விரு பண்பாட்டு கூறுகளும் அறிஞர்களிடையே அறிவுசார் விவாதங்களைத் தூண்டியுள்ளன. அதே வேளையில், முக்கியத்துவம் வாய்ந்த ஏனைய தொல்பொருட்களின் தனிச் சிறப்புகளையும் ஒதுக்கி வைத்துவிட முடியாது. அறிஞர்களின் ஒட்டுமொத்த விவாதங்களும் மூன்று முக்கிய கூறுகளைச் சுற்றியே சுழல்கின்றன. அவை முறையே, 1.சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் கீழடி தொல்பொருட்களுக்கு இடையேயான பண்பாட்டுத் தொடர்பு 2.தென்னிந்தியாவில் நகரமயமாதலின் தொடக்கம் 3. பிராக்கிருத-பிராமி மற்றும் தமிழ்-பிராமி எழுத்துக்களின் காலம் ஆகியனவாகும். இவை மட்டுமின்றி கல்வியறிவு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம், சமுதாய கட்டமைப்பு, வழிபாட்டு நம்பிக்கை மற்றும் பிற கருதுகோள்கள் குறித்தும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சிந்துவெளி நாகரிகத்திற்கும், கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்தக் கருத்து முதல் விவாதப் பொருளாக மாறியுள்ளது.. சிந்துவெளி நாகரிகம் கி.மு.15 ஆம் நூற்றாண்டு வாக்கில் இறுதி நிலைக்கு வந்தது எனலாம். கரிமக் காலக்கணிப்பு அடிப்படையில் கீழடிப் பண்பாடானது, கி.மு. 6ஆம் நூற்றாண்டு வாக்கில் தொடங்கிற்று என இன்றைய நிலையில் தெரியவருகிறது. இதுவரை வாழ்விடப் பகுதியின் ஒரு விழுக்காடு பகுதி மட்டுமே அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. அகழாய்வுப் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தொடக்க வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய இரும்புக் காலப் பண்பாட்டு கூறுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இன்றைய நிலையில், சிந்துவெளி நாகரிகத்திற்கும் கீழடி பண்பாட்டிற்கும் இடையேயான கால இடைவெளி ஆயிரம் ஆண்டுகள் ஆகும். பொதுவாக, தென்னிந்தியாவில் இந்த பண்பாட்டு இடைவெளி இரும்புக்கால பண்பாட்டு எச்சங்கள் கொண்டு நிரப்பப்படுகிறது. தென்னிந்தியாவில் இரும்புக்காலப் பண்பாட்டில் காணப்படுகின்ற குறியீடுகள் மட்டுமே சிந்துவெளி நாகரிகத்திற்கும் தென்னிந்தியாவிற்கும் இடையேயான பண்பாட்டுத் தொடர்பின் எச்சங்களாகக் கருதப்படுகின்றன. தமிழ்நாட்டின் பிற அகழாய்வுகளில் கிடைக்கப் பெற்றுள்ளது போன்றே, கீழடி அகழாய்விலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறியீடுகள் பொறிப்பு கொண்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பிற அகழாய்வு இடங்களைப் போல் அல்லாமல், தமிழகத்திலுள்ள இரும்புக் காலம் மற்றும் தொடக்க வரலாற்று காலத்தைச் சார்ந்த தொல்லியல் சார் அகழாய்வு இடங்களில் இருந்து 5000-க்கும் மேற்பட்ட குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. B.B.லால் அவர்கள் குறிப்பிட்டது போல், கணிசமான குறியீடுகள் சிந்துவெளி எழுத்துக்களோடு நெருங்கிய உறவு கொண்டவையாக காணப்படுகின்றன. குறியீடுகள் மற்றும் சிந்துவெளி எழுத்துகளுக்கு இடையே காணப்படும் இவ்வுறவு அல்லது ஒற்றுமையானது இவ்விரு பண்பாட்டிற்கும் இடையே மொழியியல் சார்ந்த உறவு இருக்கக்கூடும் என்ற அடிப்படையில் அறிஞர் பெருமக்கள் தங்கள் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்காலத்தில், குறியீடுகள் மற்றும் சிந்துவெளி எழுத்துக்களைப் படித்தறியும்போது இதற்கான தீர்வினைக் காண இயலும். அதே நேரம், தமிழ்நாட்டில் கிடைக்கும் அதிக எண்ணிக்கையிலான குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகளை எளிதில் புறந்தள்ள இயலாது. இரண்டாவது விவாதப் பொருளாக மாறியிருப்பது நகரமயமாக்கல் ஆகும். கங்கைச் சமவெளி மற்றும் தென்னிந்திய நிலவியல் சூழல்களுக்கிடையே எப்போதும் வேறுபாடு உண்டு. பொதுவாக அகழாய்வில் பெரிய அளவிலான செங்கல் கட்டுமானங்கள் கிடைப்பது நகரமயமாக்கல் நடைபெற்றுள்ளது என்பதை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால், இவற்றிற்கும் மேலாக வாழ்விடப் பகுதியின் பரப்பளவு, உள்நாடு மற்றும் வெளிநாட்டு வணிகச் செயல்பாடுகள், வணிகப் பெருவழிகள், தொழில்நுட்பத்திறன், பல்வேறு இனக்குழுக்கள் மற்றும் மொழியியல் அடிப்படையிலான பல்வேறு இனக்குழுக்கள் வாழ்ந்தமைக்கான தடயங்கள், ஆடம்பர பொருட்களைப் பயன்படுத்துதல், எழுத்துகளின் பயன்பாடு, மொழியியல் கட்டமைப்பு, கல்வியறிவு நிலை, பல்வேறு தொழிற்கூடங்கள், அரசு மற்றும் அரசுருவாக்கம் போன்ற அம்சங்கள் நகரமயமாக்கலை உறுதி செய்கின்றன. கீழடியில் கிடைக்கப் பெற்றுள்ள செங்கல் கட்டுமானங்கள் மற்றும் தொல்பொருட்கள் போன்றவை தென்னிந்தியாவில் உருவான நகரமையங்களில் கீழடியும் ஒன்று என்பதை தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. இவ்வகைக் கூறுகள் அரிக்கமேடு, காவேரிப்பட்டினம், அழகன்குளம், கொற்கை, உறையூர், கரூர், கொடுமணல் போன்ற இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளன. நகர்மயமாக்கலை உறுதிபடுத்துவதற்கு செங்கல் கட்டுமானங்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியதில்லை. ஏனெனில், தமிழ்நாட்டு வரலாற்றில் இடைக்காலத்தில் ஆட்சி செய்த பேரரசுகளான பல்லவர், பாண்டியர், சோழர் காலத்தில் கூட மிகப்பெரிய கட்டுமானங்கள் காணப்படவில்லை. வெப்ப மண்டலம் மற்றும் துணை வெப்ப மண்டலங்கள் சார்ந்த இடங்களில் வாழும் மக்கள் செங்கல் கட்டுமானங்களைவிட மரத்தாலான மேற்கட்டுமானங்களையே பெரிதும் விரும்பியுள்ளனர். கீழடியில் வெளிக்கொணரப்பட்ட செங்கல் கட்டுமான அமைப்புகளும் தொல்பொருட்களும் நகரமயமாக்குதலின் இருப்பை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. மூன்றாவது முக்கியமான மற்றும் சிக்கலான விவாதம் தமிழி (தமிழ்-பிராமி) எழுத்து வடிவத்தின் காலம் குறித்ததாகும். கீழடி அகழாய்வில் 353 செ.மீ ஆழத்தில் சேகரிக்கப்பட்ட கரிமம் மாதிரி காலப்பகுப்பாய்வுக்கு உட்படுத்தபட்டு அதன் காலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டு (கி.மு. 580) என கால வரையறை செய்யப்பட்டதன் மூலம் அதே மண்ணடுக்கில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்-பிராமியின் காலமும், கி.மு. 6-ஆம் நூற்றாண்டு என கால நிலையில் முன்னெடுத்து செல்லப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்-பிராமி வரிவடிவத்தின் காலம் கி.மு.5-ஆம் நூற்றாண்டு என்று கருதப்பட்டு வந்த நிலையில், அதற்கு மாறாக மேலும் ஒரு நூற்றாண்டு காலம் முன்னோக்கி எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இதுவரை, நான்கு தொடக்க வரலாற்று தொல்லியல் இடங்களான கீழடி (16), அழகன்குளம் (4), பொருந்தல் (2), கொடுமணல் (5) ஆகியவற்றிலிருந்து 27 கரிமக்காலக் கணிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் காலக்கட்டம் கி.மு. 6 நூற்றாண்டுக்கும், கி.மு. முதலாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை சார்ந்ததாகும். இவற்றில் 5 காலக்கணிப்புகள் கி.மு. 5 மற்றும் 4-ஆம் நூற்றாண்டுக்கு இடையிலானவை. 4 காலக்கணிப்புகள் கி.மு. 4 மற்றும் 3-ஆம் நூற்றாண்டுக்கு இடையிலானவை. 15 காலக்கணிப்புகள் கி.மு.3 மற்றும் 2-ஆம் நூற்றாண்டுக்கு இடையிலானவை. இரண்டு காலக்கணிப்புகள் கி.மு. 2 மற்றும் 1-ஆம் நூற்றாண்டுக்கு இடையிலானவை. ஒரு காலக்கணிப்பு கி.மு. 6 நூற்றாண்டைச் சேர்ந்தது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெளிக்கொணரப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்பு பெற்ற பானை ஓடுகள், நூற்றுக்கும் அதிகமான குகை கல்வெட்டுகள், நான்கு நினைவு நடுகற்கள், இவற்றோடு எழுத்து பொறிக்கப்பட்ட ஏராளமான முத்திரைகள், மோதிரங்கள், நாணயங்கள் ஆகியன இந்த எழுத்து முறை நீண்டகாலம் நின்று நிலவி வந்தவை தெளிவாக உணர்த்துகின்றன. இதுவரை மேற்கொண்ட 27 கரிமக் காலக்கணிப்புகளில் ஐந்து காலக்கணிப்புகள் கி.மு.5-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இவற்றில் கி.மு. 6 நூற்றாண்டு காலக்கணிப்பை ஏனைய காலக்கணிப்புகளோடு இணைத்து ஆய்வு செய்தல் வேண்டும். ஏற்கனவே, குறிப்பிட்டதைப் போல இதுவரை ஒரு விழுக்காடு அளவுதான் வாழ்விடப் பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கீழடியில் அகழாய்வுப் பணிகள் மேலும் விரிவுப்படுத்தப்படும் போது இன்னும் அதிக காலக்கணிப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்கால அகழாய்வுகளில் கிடைக்கும் காலகணிப்புகள் மூலம் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண இயலும். அனைத்திற்கும் மேலாக, இத்தகைய மதிப்புமிக்க தொல்பொருட்களை வெளிக்கொணர்ந்த இந்திய தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆகியவற்றை பாராட்டுதலுக்குரியவை. ஒவ்வொரு அகழாய்வும், சில சிக்கல்களுக்கும், சில கருதுகோள்களுக்கும் விடையளிக்கின்றன. அதே சமயம், புதிய சிக்கல்களையும், கேள்விகளையும் உருவாக்குகின்றன. அக்கேள்விகளுக்கு அல்லது சிக்கல்களுக்கு எதிர்காலத்தில் தீர்வு காண வேண்டியது நமது கடமையாகும். கீழடி அகழாய்வுப் பணிகளில் ஈடுபட்ட அனைத்து தொல்லியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களையும் மனதார பாராட்டுவது ஒவ்வொருவரின் கடமையாகும். மேலும், அகழாய்வு அறிக்கையை உரிய நேரத்தில் வெளிக்கொணர்வது முக்கியமான சமுதாய பொறுப்பு என எண்ணுகிறேன். அகழாய்வில் வெளிப்படும் தொல்பொருட்களை அறிவியல் முறையில் ஆய்வுக்கு உட்படுத்தி, முறையாக உரிய காலத்திற்குள் அகழாய்வு அறிக்கை தயாரிப்பது என்பது கடினமான பணியாகும். இதற்கு அதிக காலம் தேவைப்படும். ஆயினும், முதனிலை அறிக்கையை நூல் வடிவில் குறுகிய காலத்தில் கொண்டு வந்துள்ள தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை முதன்மைச்செயலாளர்/ ஆணையர் திரு. த.உதயச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் நமது பாராட்டுக்குரியவர். இந்த முதனிலை அறிக்கை ஆரோக்கியமான அறிவுசார் விவாதத்தை முன்னெடுத்து செல்லும் என எண்ணுகிறேன். தமிழ்-பிராமியின் காலம், நகரமயமாக்கல், கல்வியறிவு மற்றும் இவை சார்ந்த பண்பாட்டு கூறுகள் தொடர்பான கேள்விகளை கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் எழுப்புவது பாராட்டுக்குரியது. இதுபோன்ற ஆக்கப்பூர்வமான திறனாய்வுகள் மற்றும் விமர்சனங்கள் அடுத்தகட்ட ஆய்வுகளை தொல்லியலாளர்கள் மேற்கொள்ளவும் அதன் வழி எல்லோருக்கும் பயனளிக்கும் வகையில் ஆய்வு முடிவுகளை வெளிக்கொணரவும் உதவும் எனலாம்.
பத்மஸ்ரீ பேராசிரியர்
திரு. திலீப் கே.சக்ரவர்த்தி
மதிப்புறு மேனாள் பேராசிரியர் தெற்காசிய தொல்லியல் துறை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (U.K).
பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் தற்போது பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர் கா.இராஜன் அவர்களிடமிருந்து சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் தொல்லியல் ஆய்வுகள் குறித்து அறியும் வாய்ப்பைப் பெற்றேன். நாங்கள் அவருடைய கொடுமணல் ஆய்வுகள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். இத்தொல்லியல் இடத்திலிருந்து எந்த கரிமக் காலக்கணிப்பும் வருவதற்கு முன்பு இது நடந்தது. அந்த விவாதத்தின் முடிவு என்னவென்றால், மண்ணடுக்காய்வின் அடிப்படையில் தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகள் உள்ள பானையோடுகளின் காலம் கி.மு 500 என்பதாகும். இதன் பொருள் என்னவெனில், தமிழ்நாட்டில் தோராயமாக கி.மு. 500 வாக்கிலேயே எழுத்தறிவு தொடங்கிவிட்டது. அதாவது தமிழ்நாட்டில் தொடக்க வரலாற்றுக் கால வாக்கிலேயே எழுத்தறிவு நிலை தொடங்கிவிட்டது என்பதாகும். வட இந்தியாவில் வரலாற்றுத் தொடக்கக் காலம் தோராயமாக கி.மு 800 - 500க்கு இடையே தொடங்கியது. தமிழகத்தில் கிடைத்துள்ள காலக்கணிப்பும் இதே காலகட்ட வரம்பிற்குள் வருகிறது. இரண்டு கருத்துகள் உடனடியாகத் தெளிவாகின்றன. முதலாவதாக, இலங்கையில் சிரன்தெரனியகலா மேற்கொண்ட கரிம காலக் கணிப்பின் அடிப்படையில், இலங்கை அநுராதபுரத்தில் கி.மு.450 காலக்கட்டத்தில் தமிழ் பிராமி எழுத்து முறை தொடங்கிவிட்டது என்பது தெரிய வந்ததைப் போன்று, தமிழ்நாட்டிலும் தமிழ் பிராமி இதே காலத் திட்டத்தில் தொடங்கியுள்ளது என்பதாகும். இரண்டாவதாக, கங்கைச் சமவெளி மற்றும் பிற பகுதிகளில் தொடக்க வரலாற்றுக் காலம் தொடங்கிய அதே காலக்கட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட இப்பகுதியிலும் அக்காலம் தொடங்கிவிட்டது என்பதாகும். நீண்ட காலமாகவே தமிழகத்தின் தொல்லியல் ஆய்வுக் களங்களாக, பெருங்கற்கால ஈமக்குழிகளும் , ரோமானிய தொடர்பும் மட்டுமே இருந்து வந்துள்ளன. இதன் விளைவாக தமது கண்களின் முன்பாக காணக்கிடைத்த தரவுகளை அறிஞர்கள் காணத் தவறினர். நான் எனது “தக்காணம் மற்றும் தென் தீபகற்ப பண்டைய வழித் தடங்கள்” எனும் புத்தகத்தை 2010-ல் வெளியிட்டபோதே, சங்க இலக்கியங்களின் காலம் கி.மு. 500 என்று மதிப்பிடத் தயங்கவில்லை. மேலும், தமிழ்நாட்டில் மிகத் தொன்மையான அரசின் தோற்றம், மெகஸ்தனிஸ் நாட்குறிப்புகள் அடிப்படையில் தோராயமாக கி.மு.7-6-ஆம் நூற்றாண்டுகள் ஆக கொள்ளலாம் என்ற சிந்தனையையும் பதிவு செய்திருந்தேன். கொடுமணல், பொருந்தல் பகுதிகளில் கா.ராஜன் மேற்கொண்ட அகழாய்வுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளின் மூலமாகப் பெறப்பட்ட பல கரிம காலக்கணிப்புகளின் முடிவுகள் தமிழகத் தொல்லியல் வளர்ச்சி குறித்த நமது பார்வையை அடியோடு மாற்றியுள்ளன. மேலும், பெருங்கற்கால ஈமக்குழிகள், பண்டைய ரோமானிய நாணயங்கள் மீது மட்டுமே நிலைத்திருந்த நமது பார்வையை பெருங்கற்கால வாழ்விடங்கள் மற்றும் காலக்கிரம வளர்ச்சிகளின் மீது திருப்பியுள்ளன. இது இவ்வாய்வாளர்களின் மிகப்பெரிய சாதனை ஆகும். தமிழ் நாட்டின் தொல்லியல் குறித்த மேலும் ஒரு கருத்தை கவனத்தில் கொண்டுவர விரும்புகிறேன். தமிழ்நாடு கல்வெட்டுச் சான்றுகள் நிறைந்த மாநிலம். இவற்றின் அடிப்படையில் பல பழங்காலக்கூறுகளை நாம் களத்தில் அடையாளம் காண இயலும். மேலும் தமிழகம் மிகவும் தொன்மையான மண் என்ற பெருமிதத்தையும் உணர வைக்கவல்லவை. எனது வயது மூப்பின் காரணமாக கள ஆய்வில் என்னால் ஈடுபட இயலாது. ஆனால் இளம் ஆய்வாளர்கள் எதிர்காலத்தில் இத்தகைய கள ஆய்வின் முக்கியத்துவத்தை மறக்கமாட்டார்கள் என நினைக்கிறேன்.
திரு. பி.ஜெ.செரியன்
புலங்கடந்த தொல்லியல் அறிவியல்களின் மேம்பாட்டுக்கான நிறுவனம்
நவீன கோவில் நகரம் மதுரைக்கு அருகில் வைகை நதிக்கரையில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி அகழாய்வுத் தளம் நாட்டின் அறிவியல் ஆய்வு வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. பல்வேறு அகழாய்வு பருவங்கள், அகழாய்வுக்கு பிந்தைய ஆய்வுகள் மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறையின் அறிவியல் பொறுப்புணர்வு மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவை கீழடியை நாட்டின் ஒரு சிறந்த தர மாதிரி (Index) அகழாய்வுத் தளங்களுள் ஒன்றாக உருவாக்கியிருக்கிறது. சங்கக்காலத்தின் செழிப்பான இலக்கிய மரபு மூலம் தங்களது பண்பாட்டு அடித்தளத்தை நோக்கி பயணிக்கும் தமிழ் மக்களின் தேடலுக்கு தங்கள் இலக்கியங்களில் காணக் கிடக்கும் நகர்ப்புற பண்பாட்டுடன் ஒருங்கிணையத்தக்க அகழாய்வுத் தடயங்கள் கள ஆய்வுகளில் காணக் கிடைக்காத குறை அண்மைக் காலம் வரை நிலவி வந்தது. இந்தக் குறைப்பாட்டின் காரணமாகவே அறிஞர்களில் ஒரு பிரிவினர் அண்மைக்காலம் வரை தென்னிந்தியாவின் இரும்புக் காலத்தையும் அதைத் தொடர்ந்த வேளாண்மைக் கால தென்னிந்திய பொருள் பண்பாட்டையும் வேட்டை சமூகம் உணவு சேகரிப்போர், மேய்ச்சல் செய்வோர், பெருங் கற்காலம் என்ற ஆதிகால அம்சங்களாகவே கூறிவந்தனர். வீராம்பட்டினம் (அரிக்கமேடு), பூம்புகார், அழகன்குளம், கொற்கை, பட்டணம் (முசிறி) போன்ற எண்ணற்ற துறைமுகங்கள் கூட அந்நிய வணிகர்கள் மற்றும் அந்நியப் பயணிகள் இயங்கிய குறு வணிகத் தளங்களாகவே அடையாளம் காட்டப்பட்டன. அதோடு அன்றைய ‘குடித்தலைமை’ ஆட்சி முறை மற்றும் சமுதாய அமைப்பு ஆகியவற்றின் காரணமாக கடல் கடந்து வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு உரியதாக தீபகற்ப இந்தியா இல்லை என்ற ஊகத்தையும் வெளிப்படுத்தி வந்தனர். கீழடியில் கிடைத்துள்ள செழிப்பான மறுக்க இயலாத நகர்மயமாக்கல் தடயங்கள் இந்த ஊகங்களுக்கு நியாயமான முறையில் முடிவு கட்டியுள்ளன. கீழடி மண்ணடுக்குகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட AMS ரேடியோ கார்பன் காலப் பகுப்பாய்வு முடிவுகளின் மூலம் அதன்காலம் கி.மு.6 நூற்றாண்டு என்று நிர்ணயிக்கப்பட்டியிருப்பது கால ஆராய்ச்சியில் ஒரு மைல் கல் ஆகும் . இதன்மூலம் தமிழகத்தில் நகர்மயமாக்கம் கி.மு.6 நூற்றாண்டுக்கு நகர்த்தப்பட்டுள்ளது. இது தென்னிந்திய வரலாறு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய துணைகண்டத்தின் வரலாற்றை மறு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது . கீழடி அகழ்வாய்வின் முக்கிய அம்சங்களுள் முதலாவது. அங்கு காணப்பட்ட பெருமளவிலான கட்டுமான அம்சங்களும் நுட்பமான தொல்பொருள்களின் சேர்மானங்களும் ஒரு மேம்பட்ட நகர்மயமாக்கலை சுட்டிக்காட்டுவது ஆகும். தென்னிந்தியாவில் காணப்படும் பண்டைய கலாச்சாரம் இந்தோ – கங்கை பகுதிகளில் இரும்பு காலத்தைத் தொடர்ந்து உருவான முதிர்ந்த நகர பண்பாட்டைவிட பின்னடைந்த கிராமப்புற பண்பாடு ஆகும் என்று இதுவரை நிலவிய ஊகங்களுக்கு இது சவால் விடுகிறது. நகர நாகரித்திற்கான வரையறைப்பண்புகள் எவை எவையெனக் கருதப்படுகின்றனவோ அவற்றை வினா எழுப்பி மீளாய்வு செய்யத் தூண்டுகின்றன. கி.மு.600 காலத்திய கீழடி வெளிப்படுத்தியுள்ள தொல்பொருட்களின் செய்நேர்த்தி, தொழில்நுட்பத்திறன், பொறியியல் அறிவு, நுண்கலையுணர்வு ஆகியன திடீரெனத் தோன்றிவிட இயலாது. எனவே இதன்மூலம் தீபகற்ப இந்தியாவில் நகர நாகரிகத்தின் வரையறைப் பண்புகள் எப்போது தோன்றின என்ற தவிர்க்க இயலாத வினா எழுகின்றது. சமூகப் பண்பாட்டு மாற்றங்களுக்கு முதன்மைக் காரணமாய் அமைபவை தொழில்நுட்ப மாற்றமே என்று கருதுவோர், இரும்புக் காலத்தின் தொடக்கமே, குழுவான வாழ்க்கை முறைக்கும், நகர வளர்ச்சிக்கும் விதித்திட்ட காலம் என்பர். இந்திய துணைக் கண்டத்தின் முக்கிய இரும்புக்கால இடமான ஆதிச்சநல்லூர் மற்றும் தமிழகத்தின் இதர இடங்கள் மிக அதிக கவனம் கோருகின்றன. பெரியாறு ஆற்றின் கழிமுகப் பகுதியில் அமைந்துள்ள முசிறிப்பட்டினம் அல்லது பட்டணம் கி.மு. 1000 வாக்கிலேயே குடியிருப்புகள் ஏற்பட்டுள்ளதை மண்ணடுக்கியல், ஒப்பீட்டியல், கால அளவையியல் தடயங்கள் உறுதிப்படுத்துகின்றன. எனவே, கீழடி நகர்மயமாக்கலின் முன்நிகழ்வுகளுக்கான கால-வரையறைகளை தற்போது தொடர்ந்து நடைபெறும் அகழாய்வுகள் அளிக்கும் என அனுமானிப்பது சரியாக இருக்கும். இரண்டாவதாக, கீழடி அமைவிடம் இந்திய தீபகற்பத்தின் உள் ஒடுங்கிய பகுதியில் அமைந்திருப்பதால் நகரப் பண்பாடு பண்டைய தமிழகத்தில் கடலோர துறைமுக நகரங்களுக்கு மட்டுமே உரியதாக இருந்திருக்க இயலாது என்பதையும் உணர்த்துகிறது. பண்டைய தமிழகத்தின் துறைமுக நகரங்களுடன் உள் ஒடுங்கிய பகுதிகளையும் ஒருங்கிணைத்து ஆய்வுகள் மேற்கொள்வதன் மூலமே தென் இந்திய நாகரிகத்தின் அடித்தளங்களை வெளிக்கொணர இயலும். மூன்றாவதாக, கீழடி, அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல், பட்டணம் மற்றும் பிற இடங்களில் எதிரொலிப்பதைப் போல பண்டைய தொழில்நுட்ப வளர்ச்சியே அங்கு தொழில் கூடங்களை உருவாக்கியிருக்கும். ஈம நினைவிடங்களில் விரிந்த அளவில் எதிரொலிப்பதைப் போல அவர்களது கட்டடங்களும் அவற்றின் மையப் பொருள்களும் அன்றைய தமிழக பகுதியில் உலகப் பார்வை, ஊடாட்டங்கள், பொருளாதார நிலைத்தன்மை, ஆகியன நிலவியதை உணர்த்துகின்றன. கீழடி தனது சமகாலத் தளங்களுடன் இணைந்து உறுதிப்படுத்துவது என்னவென்றால் தொடக்க வரலாற்று காலகட்டத்தில் பண்டைய தமிழகத்தில் ஏற்பட்ட வேளாண் மற்றும் தொழில்நுட்ப புரட்சியே இங்கு ஐந்திணைகளும், கடல் கடந்த வாணிகமும் ஒருசேர உருவாகக் காரணி என்பதாகும். சங்க இலக்கிய மூலங்கள் மூலம் நாம் அறிந்த தமிழகத்தின் அறிவார்ந்த, வேளாண், தொழில்துறை, வணிக மற்றும் இயற்கை வளங்களை உள்ளடக்கிய பண்டைய தமிழக நகர நாகரிகத்தை கீழடியின் கண்டுபிடிப்புகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன. கீழடி மற்றும் அதன் சமகால தமிழக இடங்களில் இருந்து பெறப்பட்டுள்ள பயன்பாட்டுப் பொருள் தடயங்கள் தமிழர்களின் மேதமைத் தன்மையின் பண்டைய வெளிப்பாடுகளாக எதிரொலிக்கின்றன. கீழடி அகழாய்வுகளில் இருந்து இதுவரை கவனமாக ஆய்வு செய்யத் தகுந்த மதம் தொடர்பான குறியீடுகள் எவையும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தீபகற்பத்தின் தொடக்க வரலாற்றுக்கால இடங்களில் இருந்து இதுவரை வெளிக்கொணரப்பட அனைத்து தொல்பொருள்களையும் இணைத்து ஆய்வு செய்யும்போது, இது சிந்தனையை தீவிரமாகத் தூண்டுகிறது. ஏற்கனவே, சங்கக்கால இலக்கியங்கள் மற்றும் சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற இலக்கியங்கள் (இவை பெரும்பாலும் பண்டைய மதுரையின் சுற்று வட்டாரங்களில் நிகழ்பவை) காட்டுவது போல சமணம் மற்றும் பவுத்தத்தின் செல்வாக்கு காணப்படுவது அறிந்ததே. பண்டைய தமிழகத்தின் பண்பாட்டு மையமாக கீழடியைப் (பண்டைய மதுரை) புரிந்து கொள்ளுதல் அல்லது எதிர்வாதம் புரிதல் என்பதே எதிர்காலத்தில் பல்வேறு ஆய்வாளர்களின் சிந்தனைப் போக்கில் நிரம்பி இருக்கும். பண்டைத் தமிழகத்தின் பண்பாட்டு மேன்மைக்கான முன்நிகழ்வுகள் மீது நாம் ஆய்வுகளை மேற்கொள்ள, சிந்து வெளிக்கும் தமிழகத்துக்கும் இடையே காணப்படும் விரிந்த இடைவெளி மறையக் கூடும். கீழடி கண்டுபிடிப்புகள் மூலம் விரைவில் வெளிப்பட உள்ள ஆய்வு முடிவுகள் என்னவெனில் அவை மேய்ச்சல் சமுதாயமாக மாறிய செம்புக் காலத்தினை நகர்ப்புற இரும்புக்கால பண்பாட்டு பரிணாமத்துடன் இணைக்கிறதா இல்லையா என்பது தான். அகழாய்வுத் தளங்களை தனித்தனியாக அணுகும் ஆய்வுமுறை அகழாய்வு நடைமுறைகளில் ஏற்புடையதல்ல. தென் இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு இல்லை. ஒரு பகுதியின் ஆழமான வரலாற்றினை அணுகும்போது இருபதாம் நூற்றாண்டின் நிர்வாக அல்லது மொழி எல்லைகளைக் கடக்கத் தவறிவிடுகிறோம். கீழடியின் முக்கியத்துவத்தைப் பொருத்திப் பார்ப்பதில் நவீன மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, புதுவை, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா இணைந்ததே பண்டைய தமிழகம் என்ற அணுகுமுறை வேண்டும். இயற்கையுடன் இணைந்த வாழ்வு, சாதி அமைப்பு இன்மை, குறைந்த அதிகாரங்கள் பயன்பாடு, ஆகியவற்றைக் கொண்ட ஒரு பண்பாட்டையே கீழடி அகழாய்வுகள் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். கீழடி கண்டுபிடிப்புகள் நமக்கு உணர்த்த விரும்புவது என்னவென்றால் மதச்சார்பின்மை, உள் இணைக்கப்பட்ட, சமநிலைப்படுத்தப்பட்ட சமூக உறவுகள் ஆகியன இயற்கையோடு இணைந்த ஒரு சமுதாயத்துக்கு அந்நியமாக இருக்கமுடியாது என்பதுதான். கீழடியின் கடந்த காலத்தை நேர்மையாக, பாகுபாடின்றி நம்பகத்தன்மையுடன் மறு கட்டமைப்பு செய்யும் முயற்சிகள் என்பது பல்துறைகள் சார்ந்த பல்துறைகள் இணைக்கப்பட்ட உயர்திறன் கொண்ட கூட்டு ஆய்வுகளை கோருகிறது. தமது பண்டைய தமிழ் வேர்களை அறிவதில் ஆர்வமும், பெருமிதமும் அனுபவமும் கொண்டு உலகம் முழுவதும் வாழும் மக்கள் கீழடியை “பூமியில் அமைந்த ஓர் உன்னதப் பகுதியாக” மாற்ற அத்திட்டத்துடன் இணைய வேண்டும். சிந்தனைத் திறன் கொண்ட அறிவார்ந்த சமூக வலைப்பின்னலும் அறிவியல் தொழில்நுட்பமும் குறிப்பிடத்தக்க பங்காற்றாமல் கீழடி மற்றும் அதன் அருகமைந்த இடங்களின் முக்கியத்துவம் புறக்கணிக்கப்பட்டதாகவே நீடிக்கும். தற்போதைய வெளியீடு, பண்டையத் தமிழகப் பண்பாட்டுப் பெருமையினை மீட்டெடுக்கும் நீண்ட அறிவியல் சார்ந்து அமைந்த செயல்பாட்டின் முக்கிய படிக்கல் ஆகும். கீழடி அகழாய்வு முடிவுகள் அடங்கிய முதல் கையேட்டினை உங்களுடைய பார்வைக்கும் திறனாய்வுக்கும் பரிந்துரைப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.