மதிப்புறு அணிகலன்கள்

கீழடியில் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் தங்கத்தினாலான ஏழு ஆபரணத் துண்டுகள், செம்பு அணிகலன்கள், மதிப்புமிக்க மணிகள், 4000க்கும் மேற்பட்ட கல்மணிகள், கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், தந்த வளையல் துண்டுகள், சீப்பு மற்றும் சுடு மண்ணாலான மணிகள் ஆகிய பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய மதிப்புறு அணிகலன்களும், ஏனைய அணிகலன்களும் சங்க காலச் சமூகம் வளமையுடன் இருந்ததற்கானச் சான்றுகளாகும்.

மணிகள்

கீழடி அகழாய்வில் கண்ணாடி, பேஸ்ட், படிகம், குவார்ட்ஸ், பெயின்ஸ், அகேட், கார்னீலியன், மற்றும் சுடுமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட 4429 மணிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கண்ணாடி மற்றும் பேஸ்ட் வகை மணிகள் பல நிறங்களில் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும், இம்மணிகள் கோளம், உருளை, நெல்லிக்காய், பீப்பாய் வடிவங்களைக் கொண்டுள்ளன. இவற்றில் குறிப்பாக A2/2 அகழாய்வுக் குழியில் 1. 47 மீட்டர் ஆழத்தில் 120 கண்ணாடி மணிகளும், 1.55 மீட்டர் ஆழத்தில் 357 கண்ணாடி மணிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

   மணி வகைகள்

காதணிகள்

இந்த அகழாய்வில் இரண்டு வகையான சுடுமண் காதணிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒன்று, நல்ல களிமண்ணைக் கொண்டு வட்டவடிவில் தட்டையாகவும் சற்று தடிமனாகவும் மேல் புறத்தின் நடுப்பகுதியினைச் சுற்றி சிறிது பள்ளமான தடத்தை ஏற்படுத்தி காது துளையில் பொருந்தும் வண்ணம் அமைக்கப்பட்டு தீயிலிட்டு சுடப்பட்டு செய்யப்பட்ட காதணி. மற்றொன்று அதே போன்று தட்டையான நடுப்பகுதியில் துளையிடப்பட்ட காதணி ஆகும். இவை பனைஓலையைச் சுற்றி காதணியாக அணிவது போன்ற அமைப்பில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இக்காதணிகள் தட்டையான பகுதியின் ஒரு பக்கத்தில் நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஒரு காதணியில் ‘ழ‘ வடிவம் போன்ற அமைப்பில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த அகழாய்வில் மொத்தம் 28 சுடுமண் காதணிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

   காதணிகள்

வளையல்கள்

இந்த ஆண்டு கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் உடைந்த வளையல்களின் 63 பாகங்கள் கிடைத்துள்ளன. இத்தகைய வளையல்கள், பல்வேறு அளவுகளிலும் சங்கு மற்றும் கண்ணாடி போன்ற மூலப்பொருள்களாலும் செய்யப்பட்டவையாகும். இவை தடித்த மற்றும் மெல்லிய குறுக்கு வெட்டினைப் பெற்றுள்ளன. ஒரு வளையலின் மேல் பாகத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன், இரு சிறிய கோடுகள் மேல் பாகத்தினைச் சுற்றி அலங்கரிக்கின்றன.

   வளையல்கள்