புனேவின் டெக்கான் கல்லூரி, முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சமர்ப்பித்த விலங்கின எச்சங்களின் பகுப்பாய்வு அறிக்கை தொடக்க வரலாற்று காலத்தின் வாழ்வாதார நிலை குறித்த விரிவான பார்வையை வழங்கியுள்ளது. கீழடி அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட விலங்குகளின் 70 எலும்புத் துண்டுகளின் மாதிரிகள், தன்மைக்கேற்ப வகைப்படுத்தப்பட்டதில் இவை திமிலுள்ள காளை, எருமை, வெள்ளாடு, கலைமான், காட்டுப்பன்றி மற்றும் மயில் ஆகிய உயிரினங்களுக்குரியவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றில் திமிலுள்ள காளை, பசு, எருமை, வெள்ளாடு ஆகிய விலங்கினங்கள் 53 சதவீதம் இடம்பெற்றுள்ளன. எனவே, இவ்விலங்கினங்கள் வேளாண்மைக்கு உறுதுணை செய்யும் வகையில் கால்நடைகளாக வளர்க்கப்பட்டுள்ளன எனக் கருதலாம். 6.66% கலைமான் எலும்பும், 1.33% காட்டுப்பன்றியின் எலும்பும் கிடைத்திருந்தாலும் அவைகள் மனிதனால் வளர்க்கப்படா நிலையிலே இருந்துள்ளது விளங்குகிறது. கலைமான், வெள்ளாடு, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளின் சில எலும்பு மாதிரிகளில் வெட்டுத் தழும்புகள் காணப்படுகின்றன என்று ஆய்வில் குறிப்பிட்டுள்ளதால், இவ்விலங்கினங்களை அக்கால மனிதர்கள் உணவிற்காகப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிய வருகிறது.இப்பகுப்பாய்வு முடிவுகள் மூலம் சங்காலச் சமூகம், வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டுடிருந்ததோடு, கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டிருந்தது என்பது தெளிவாகிறது. இனி வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் அகழாய்வின்போது சேகரிக்கப்படும் மகரந்தம் மற்றும் பைட்டோலித் போன்ற தாவரவியல் மாதிரிகளை முறையாக பகுப்பாய்வு செய்வதன் மூலம் கூடுதல் தெளிவு பெற முடியும். அகழாய்வு தொடர்ந்து நடைபெறும் நிலையில், இவை போன்ற உயிரின எச்சங்களின் மாதிரிகள் நிறைய கிடைக்க வாய்ப்பிருக்கின்றன.