தமிழகத்தில் கடல்வழி வணிகம் சிறப்புற்று விளங்கியமைக்கு நீண்ட கடற்கரையைக் கொண்டிருந்ததே காரணமாகும். மரக்கலங்கள் வந்து செல்லவும், நங்கூரமிட்டுநிற்பதற்கான வசதியைப் பெற்றிருந்ததும் மற்ற காரணிகளாகும். சங்க காலத்தில் கிழக்கு கடற்கரையில் ஒவ்வொரு ஆறும் கடலில் கலக்கும் இடங்களில் மிகப் பெரிய துறைமுகங்களும் ஏனைய பகுதிகளில் சிறிய துறைமுகங்களும் சிறப்புற்றிருந்தன. பாலாறு கடலில் கலக்கும் இடமான வசவ சமுத்திரம், காவேரி கடலில் கலக்கும் இடமான பூம்புகார், வைகை கடலில் கலக்கும் அழகன்குளம், தாமிரபரணி கடலில் கலக்கும் கொற்கை போன்றவை சிறந்த துறைமுகங்களாக விளங்கின. அதேபோல், மேற்கு கடற்கரையில் பெரியாறு கடலில் கலக்கும் இடமான முசிறிப்பட்டினமும் சிறந்து விளங்கியது. தமிழகம் கீழை மற்றும் மேலை நாடுகளுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தது. குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகள், இலங்கை, வளைகுடா நாடுகள், எகிப்து, உரோம் ஆகிய நாடுகளுடன் சிறப்பாக வணிகம் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து முத்து, மணிக் கற்கள், துணி வகைகள், மிளகு மற்றும் வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதேபோன்று மேலை நாட்டிலிருந்து தங்கம், பானங்கள், நறுமணத் திரவியங்கள், குதிரை போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன. கீழடி அகழாய்வுப் பகுதிகளில் வடமேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரம், குஜராத் போன்ற பகுதிகளில் பரவலாக காணப்படும் அகேட் மற்றும் சூது பவளம் (கார்னீலியம்) போன்ற மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.