தமிழ்நாட்டு அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள பகடைக் காய், வட்டச்சில்லுகள் மற்றும் ஆட்டக்காய்கள் அன்றைய சமுதாயத்தின் வாழ்க்கை முறையையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் பிரதிபலிக்கின்றன. அகழாய்வில் கிடைக்கப்பெற்ற விளையாட்டுப் பொருட்களில் பெரும்பாலானவை சுடுமண்ணால் ஆனவை. கீழடி அகழாய்வில் விளையாட்டுப் பொருளான 601 வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போதும் மதுரை மற்றும் பிற்பகுதியில் இவ்விளையாட்டு ‘பாண்டி’ அல்லது ‘நொண்டி’என்ற பெயரில் விளையாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தாய விளையாட்டுக்கான பகடைக் காய்களும் கிடைத்துள்ளன. சிறுவர்கள் வண்டி இழுத்து விளையாடும் வண்டிகளின் சக்கரங்கள் போன்றவையும் கிடைத்துள்ளன. மேலும், பெரியவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் விளையாடும் விளையாட்டிற்குப் பயன்படும் பல்வேறு அளவிலான 80 ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளன. கீழடியில் அதிக அளவில் கிடைத்துள்ள இந்த தொல்பொருட்கள் சங்க காலத்தில் ஆண், பெண், சிறுவர்கள் விளையாட்டுகளைக் கண் முன்னே படம்பிடித்துக் காட்டுகின்றன.