மனித குலத்தின் மிகத்தொன்மையான கலை வடிவம் சுடுமண் உருவங்களாகும். இக்கலையானது கல், மரம், தந்தம், உலோகம், போன்றவற்றில் கலை வடிவங்கள் வடிப்பதற்கு முன்னர் தோன்றியது. இச்சுடுமண் உருவங்கள் செய்வதற்கு மிகப்பெரிய தொழில்நுட்பமோ சிறப்பான கருவிகளோ தேவையில்லை. மனிதனின் கைவிரல்களே கருவியாகும். பழங்கற்கால மனிதன் தன் உணவு வேட்டைக்குப் பயன்படுத்திய கருவிகளைக் கல்லில் செதுக்கினான். அதனைத் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி நிலைகளில் தனது எண்ணங்களை பாறை ஓவியங்களாக வரைந்தான். பின்னர், மண்ணைக் கொண்டு உருவங்களாக உருவாக்கினான். களிமண் அல்லது வண்டல் மண் மற்றும் தண்ணீர் சேர்த்து அழகிய சுடுமண் உருவங்களைப் படைக்க முற்பட்டான். இவற்றினை தகுந்த வெப்பத்தில் சூளையில் வைத்து சுடும் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தான். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் குறிப்பிடத்தக்க வகையில் பல்வேறு காலகட்டத்தைச் சார்ந்த சுடுமண்ணாலான உருவங்கள் கிடைத்துள்ளன. இவற்றில் மனித உருவங்கள், விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், போன்றவை முக்கிய இடம் வகிக்கின்றன.