தமிழி (தமிழ்-பிராமி)

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குறியீடுகளுக்கு அடுத்து காணக்கிடைக்கின்ற வரிவடிவம் தமிழ்- பிராமி எழுத்து வடிவமாகும். இவ்வெழுத்தை தமிழி என்றும் பண்டைத் தமிழ் எழுத்துகள் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழகத்தில் வரலாற்று தொடக்கக் காலத்தைச் சார்ந்த இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் தமிழி (தமிழ்- பிராமி) எழுத்து பொறிப்பு பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மோதிரங்கள் முந்தைய அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டன.

இவற்றில் குவிரன் ஆத[ன்], ஆதன் போன்ற ஆட்பெயர்களும், முழுமைப்பெறாத சில எழுத்துகளுடன்கூடிய உடைந்த பானை ஓடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் வரும் “ஆதன்” என்ற பெயர் “அதன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காலத்தால் முந்தைய தமிழியில் (தமிழ்- பிராமியில்) உயிர்க் குறில் வடிவத்திலிருந்து உயிர் நெடிலை வேறுபடுத்திக் காட்ட ஒலிக்குறியீடு இடும் வழக்கம் இல்லை என்பதை கா. இராஜன் தமது Early Historic Writing System: A Journey from Graffiti to Brahmi என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார். இந்நிலை உயிர் எழுத்துகளில் மட்டுமே காணப்படுகிறது. எனவே, கீழடி தமிழி (தமிழ் -பிராமி) எழுத்து பொறிப்புகள் காலத்தால் முந்தைய என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

தமிழகத்தில் 32-க்கும் மேற்பட்ட ஊர்களில் சங்க காலத்தைச் சார்ந்த தமிழ்   -பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 110 குகைக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் அவர்களால் படித்தறியப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வில் தமிழி (தமிழ்-பிராமி) எழுத்துப் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வில் மட்டும் சேகரிக்கப்பட்டுள்ளன.