கீழடி

கீழடி ஓர்-அறிமுகம்

தொல்லியல் துறை இன்று பல்வேறு பரிமாணங்களில் விரிவடைந்து வளர்ச்சிப் பெற்றுள்ள துறையாக உள்ளது. வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல் மற்றும் வரலாற்றுக்கால தொல்லியல் என இருபெரும் பிரிவுகளாகத் திகழ்கிறது. தொல்லியல் ஆய்வில் அண்மையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளின்படி, சுற்றுச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. தொல்லியல் பகுதியில் வாழ்ந்த மக்கள் மட்டுமல்லாமல் அவர்களது பொருள் பண்பாடு குறித்தும் அறிய சுற்றுச் சூழல் தொல்லியல் மற்றும் இனவியல் தொல்லியல் ஆய்வுகளுக்கு தற்போது தனி முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தொல்லியல் என்பது அகழாய்வு மட்டுமின்றி இலக்கியங்கள், கல்வெட்டுகள், காசுகள் மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட மூலப் பொருட்களையும் ஆய்வு செய்வதாகும். இருப்பினும் அகழாய்வுப் பணியே, தொல்லியல் ஆய்வின் முதன்மைப் பணி ஆகும். உலகப் புகழ் பெற்று நிற்கும் மெசபடோமியா, எகிப்து, மயன் நாகரிகங்கள் மற்றும் கிழக்கில் சீனம் போன்ற நாகரிகங்கள் அகழாய்வுகள் மூலமே வெளிக்கொணரப்பட்டன. இந்தியாவில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் பழங்கற்காலம், புதியகற்காலம், செம்புக்காலம் மற்றும் இரும்புக்கால வாழ்விடங்கள் வெளிவருவதற்கு உதவியாக இருந்துள்ளன. தமிழ்நாட்டில் தற்செயலாக கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் வரலாறு தொடர்வது கண்டுபிடிக்கப்பட்டாலும் முறையாக பல துறைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் நடத்தப்பெற்ற அகழாய்வுகளின் வாயிலாகவே தொன்மைக்கும் அண்மைக்கும் இடைநிற்கும் பெருந்திரை அகற்றப்பட்டுள்ளது.

keeladi site view

கீழடி அகழாய்வு இடம் - வான்வழி பார்வை

தொல்லியல் குறித்து கூறுகையில், குறிப்பாக அகழ்வாய்வுப் பணிகளில் முன்னோடிகளாக விளங்கிய தொல்லியலாளர்களை இங்கு நினைவுகூர்தல் நமது கடமையாகும். தமிழகத்தில் இத்துறைக்கு ஒரு வடிவம் அளிக்கும் வண்ணம் அரும்பாடுபட்ட அயல்நாடு மற்றும் இந்திய தொல்லியலாளர்களின் அர்ப்பணிப்புகள் பதிவு செய்யப்படுவதோடு பாராட்டப்படவும் வேண்டும். இந்திய தொல்லியலின் தந்தை திரு அலெக்சாண்டர் கன்னிங்காம், இராபர்ட் புரூஸ்புட், கர்சன் பிரபு, சர் ஜான் மார்ஷல், சர் மார்டிமர் வீலர். ரேமன்ட் ஆல்சின், V.D.கிருஷ்ணசாமி, A.கோஷ், M.N.தேஷ்பாண்டே, B.K.தாபர், S.R.ராவ், B.B.லால், H.D.சாங்கலியா, V.N.மிஸ்ரா, R.S.பிஷ்த மற்றும் பல இந்திய ஆய்வாளர்கள் அகழாய்வுகளில் தத்தமது தனித்தன்மையுடன் பங்களித்து இத்துறையை மேன்மையடையச் செய்திருக்கிறார்கள். இந்திய தொல்லியல் துறை இந்தியாவில் தொல்லியல் ஆய்வுகளை நெறிப்படுத்தும் மத்திய நிறுவனம் ஆகும்.மாநிலங்கள் அளவில் மாநிலத் தொல்லியல் துறைகள், பல்கலைக்கழகங்களின் தொல்லியல் துறைகள் மற்றும் தொல்லியலில் சிறப்புப்பெற்ற தனியார் நிறுவனங்கள் தங்களின் நிலைக்கேற்ப அகழாய்வுகளை மேற்கொண்டு வருகின்றன

தமிழ்நாட்டில் மத்திய தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை பல்கலைக் கழகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம், சர்மா பராம்பரிய கல்வி மையம், காஞ்சிபுரம் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமகா நிகர்நிலைப் பல்கலைக் கழகம், கேரளா பல்கலைக் கழகம் போன்றவை பல இடங்களில் பல ஆண்டுகளாக அகழாய்வுகள் மேற்கொண்டு தமிழ்நாட்டுத் தொல்லியல் வளர்ச்சிக்கு சிறப்பு சேர்த்திருக்கின்றன.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடங்களில் தொல்லியல் சான்றுகளைக் கொண்டும், கள ஆய்வுகள் செய்தும் அகழாய்வுகளை மேற்கொண்டுவருகிறது. இதுவரை, இத்துறையானது 40 இடங்களில் அகழாய்வுகள் மேற்கொண்டு பழமையான பல்வேறு காலகட்டங்களின் தொல் எச்சங்களை வெளிக்கொணர்ந்துள்ளது. இவ்வகையில் பரிக்குளம், திருத்தங்கல், மாங்குடி, மோதூர், கோவலன்பொட்டல், ஆனைமலை, பல்லவமேடு, போளுவாம்பட்டி, பேரூர், பனையகுளம், குரும்பன்மேடு, கண்ணணூர், திருக்கோவிலூர், வசவசமுத்திரம், பூம்புகார், தொண்டி, கொற்கை, அழகன்குளம், கரூர் பட்டரைப்பெரும்புதூர் போன்ற வரலாற்றுக்கு முந்தைய மற்றும் வரலாற்றுத் தொன்மைமிக்க இடங்களில் அகழாய்வுகள் செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வகழாய்வுகள் வாயிலாக, பண்டைய தலைநகரங்கள், வணிக மையங்கள் போன்றவை அக்காலத்தில் ரோமானிய பேரரசு மற்றும் பிற நாடுகளுடனும், இந்தியாவின் பிற்பகுதிகளுடனும் தமிழகம் கொண்டிருந்த வணிகத் தொடர்புகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.