அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 17 பானை ஓடுகள் அவற்றிலுள்ள தனிமங்களைக் கண்டறியும் சோதனைக்காக இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக் கழகத்தின் புவிஅறிவியல் துறைக்கு வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டன. பானை ஓடுகளில் காணப்பட்ட கனிமங்கள், பாறைத் துகள்களின் தன்மை, மேலும் அவற்றின் பயன்பாடு குறித்து ஆய்வு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. கீழடியில் கிடைக்கப்பெற்ற, தண்ணீர் சேகரிக்கவும், சமையலுக்காகவும் பயன்படுத்தப்பட்ட பானைகள் தனித்த பானை வனைவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளூரிலேயே வனையப்பட்டவை என்பது உள்ளூர் மண் மாதிரியை ஒப்பீட்டாய்வு செய்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அழுத்தப் பெற்ற பெரும் கொள் மட்கலன்
கீழடி அகழாய்வில் இரண்டு இடங்களில் 4 மீட்டர் அளவுக்கு மேல் மிகப்பெரிய அளவில் பானை ஓடுகளின் குவியல்கள் கண்டறியப்பட்டதைக் கருத்தில் கொண்டு கீழடியில் பானை வனையும் தொழிற்கூடம் செயல்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம். அடுத்து, கீழடியில் கிடைத்த கருப்பு - சிவப்பு நிறப் பானை ஓடுகள் (black-and-red ware) சிலவற்றின் மாதிரிகள் நிறமாலையியல் பகுப்பாய்வு (Spectroscopic Analysis) சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அந்த ஆய்வு முடிவுகளின் மூலம், கருப்பு-சிவப்பு நிறப் பானை ஓடுகளின் சிவப்பு நிறத்திற்கு இரும்பின் தாதுப் பொருளான ஹேமடைட் என்பதையும், கருப்பு நிறத்திற்கு கரிமப் பொருளான கரியையும் பயன்படுத்தியுள்ளது தெரிய வருகிறது. இக்கருப்பு-சிவப்பு நிறப் பானைகளை 1100° செல்சியஸ் வெப்பநிலையில் சுட்டு உருவாக்கும் தனித்தன்மை வாய்ந்த தொழில்நுட்பத்தைப் பண்டைய கீழடிவாழ் குயவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
பானை ஒடுகளின் குவியல்
கீழடியில் கிடைத்த மட்பாண்டங்களின் தொழில்நுட்பம், தனிமங்களின் கலவை, களிமண்ணின் தன்மை ஆகியவை கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலிருந்து; கி.மு.2-ஆம் நூற்றாண்டு வரை ஒரே மாதிரியாக இருந்துள்ளன என இத்தாலியின் பைசா பல்கலைக் கழக அறிக்கையில் தெரிய வருகிறது. சில பானை ஓடுகளின் மாதிரிகள் தமிழகத்தின் பிறபகுதியில் உள்ள மண் தன்மையை ஒத்திருப்பதாகவும், அது கி.மு. 2-ஆம் நூற்றாண்டிற்குரியது என்றும் ஆய்வறிக்கை விளக்குகிறது. இதன்மூலம் வணிகர்கள், தொழில் சார்ந்தோர், பயணியர் ஆகியோரிடையே நிலவிய வணிக பரிமாற்றங்கள் உறுதியாகின்றன.