கீறல்கள்/குறியீடுகள்

இந்தியாவில் கிடைக்கப்பெற்ற வரிவடிவங்களில் காலத்தால் தொன்மையானது 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிந்துவெளி வரிவடிவங்களாகும். சிந்துவெளி பண்பாடு மறைந்தற்கும் தமிழ்-பிராமி எழுத்துகள் தோன்றியதற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு வரிவடிவம் இருந்தது. அவ்வரிவடிவத்தினை ஆய்வாளர்கள் குறியீடுகள் என்றும் கீறல்கள் என்றும் அழைக்கின்றனர். இவற்றை சாதாரண கீறல்கள் என்று புறந்தள்ளிவிட இயலாது. ஏனெனில், இவை சிந்துவெளி வரிவடிவத்தின் நீட்சியாகவும் தமிழ்-பிராமி எழுத்துகளின் முன்னோடியாகவும் இருக்க வேண்டும். சிந்துவெளி எழுத்துகள் போன்றே இவற்றை படித்தறிதலும் முழுமைபெறவில்லை.

செம்புக்கால பண்பாட்டிலும் அதன் தொடர்ச்சியாக பெருங்கற்கால பண்பாட்டிலும் இக்குறியீடுகள் கிடைக்கின்றன.இத்தகைய குறியீடுகள் (கருப்பு-சிவப்பு) பானை ஓடுகளில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இரும்புக் காலத்தில், பெருங்கற்கால ஈமச்சின்னங்களிலும் அதோடு தொடர்புடைய குடியிருப்புப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.

  கருப்பு சிவப்பு மட்கலன்களில் தோன்றும் குறியீடு

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கொற்கை, அழகன்குளம், கொடுமணல், கரூர், தேரிருவேலி, உறையூர், மாங்குளம், பேரூர் மற்றும் பிற வரலாற்று தொடக்கக்கால தொல்லியல் சார் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளிலும் குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. தமிழகம் மட்டுமின்றி இலங்கையில் திசமஹரம, கந்தரோடை, மாந்தை, ரிதியகாமா போன்ற ஊர்களிலும் இதுபோன்ற குறியீடுகள் கிடைத்துள்ளன. இந்திய துணைக்கண்டத்தில் தமிழகத்தில் இவை பரந்த அளவில் சேகரிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் 75 சதவீதம் தமிழகத்தில் கிடைக்கப்பெற்றவை என்பது சிறப்பாகும்.

தமிழ்-பிராமிக்கு முந்தைய வரிவடிவமாக விளங்கிய குறியீடுகள் பெருங்கற்கால மற்றும் இரும்புக் கால மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் எழுத்து வடிவமாகும். கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட இத்தகைய கீறல்கள் பொறித்த 1,001 பானை ஓடுகள் இரும்புக் காலம் தொட்டு இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான அடிப்படை எழுத்து முறையை அறிந்துள்ளனர் என்பதை உணர்த்துகின்றன.