வைகை ஆறு

வைகை ஆறும் அதன் கிளை ஆறான சுருளி ஆறும் சுருளி மலையில் இருந்து வளைந்து நெளிந்து சின்னமனூர், மதுரை வழியாக கிழக்கு நோக்கிப் பாய்ந்து ஓடி, இடைக்கால நகரங்களான திருப்புவனம், ராஜகம்பீரம், மானாமதுரை, பார்த்திபனூர், பரமக்குடி ஆகிய ஊர்களைக் கடந்து பின்னர் இராஜசிங்கமங்கலம், இராமநாதபுரம் ஆகிய பெரும் கண்மாய்களை நிரப்பி இறுதியில் அழகன்குளம் அருகே வங்கக்கடலில் சென்று கலக்கிறது. இப்பகுதியானது, தென்மேற்கு பருவ மழையாலும், வடகிழக்கு பருவ கனமழையாலும் நீர்வளம் பெற்று இரு போக விளைச்சல்களையும், வாழை, கமுகு போன்ற சமவெளிப்பகுதி பயிர்களையும், மலைச்சரிவுகளில் ஏலக்காய் போன்ற பயிர்களையும் வளர்த்து மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவி வருகிறது. வைகை சமவெளியின் தலைப்பகுதி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விளையும் நறுமணப்பொருட்களை கிழக்குப் பகுதியிலுள்ள நகரங்களுக்குக் கொண்டு செல்லும் ஒரு வணிகப்பெருவழியாக திகழ்ந்திருக்கின்றது. சங்க இலக்கிய நூல் தொகுப்புகளில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலில் எட்டு செய்யுள்கள் வைகை ஆற்றின் பெருமைகளை எடுத்துரைக்கின்றன. அதுபோன்று மதுரைக்காஞ்சி எனும் சங்க இலக்கிய நூலும் மதுரை நகரத்தின் மேன்மையினை விரித்துரைக்கிறது.

வைகை ஆற்றுப்படுகை

இவ்வாற்றுப் படுகை 9º 15’ மற்றும் 10º 20’ வடக்கு ரேகைக்கு இடையிலும், 77º 10’ மற்றும் 79º 05’ கிழக்கு ரேகைக்கு இடையிலும் அமைந்துள்ளது. மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் என மொத்தம் 7031 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. பெரியாறு அணை, வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, மருதநதி அணை, சாத்தையாறு அணை ஆகியவை இந்தப்படுகையில் உள்ள அணைகளாகும்.