வைகை ஆறு

வைகை ஆறும் அதன் கிளை ஆறான சுருளி ஆறும் சுருளி மலையில் இருந்து வளைந்து நெளிந்து சின்னமனூர், மதுரை வழியாக கிழக்கு நோக்கிப் பாய்ந்து ஓடி, இடைக்கால நகரங்களான திருப்புவனம், ராஜகம்பீரம், மானாமதுரை, பார்த்திபனூர், பரமக்குடி ஆகிய ஊர்களைக் கடந்து பின்னர் இராஜசிங்கமங்கலம், இராமநாதபுரம் ஆகிய பெரும் கண்மாய்களை நிரப்பி இறுதியில் அழகன்குளம் அருகே வங்கக்கடலில் சென்று கலக்கிறது. இப்பகுதியானது, தென்மேற்கு பருவ மழையாலும், வடகிழக்கு பருவ கனமழையாலும் நீர்வளம் பெற்று இரு போக விளைச்சல்களையும், வாழை, கமுகு போன்ற சமவெளிப்பகுதி பயிர்களையும், மலைச்சரிவுகளில் ஏலக்காய் போன்ற பயிர்களையும் வளர்த்து மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவி வருகிறது. வைகை சமவெளியின் தலைப்பகுதி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விளையும் நறுமணப்பொருட்களை கிழக்குப் பகுதியிலுள்ள நகரங்களுக்குக் கொண்டு செல்லும் ஒரு வணிகப்பெருவழியாக திகழ்ந்திருக்கின்றது. சங்க இலக்கிய நூல் தொகுப்புகளில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலில் எட்டு செய்யுள்கள் வைகை ஆற்றின் பெருமைகளை எடுத்துரைக்கின்றன. அதுபோன்று மதுரைக்காஞ்சி எனும் சங்க இலக்கிய நூலும் மதுரை நகரத்தின் மேன்மையினை விரித்துரைக்கிறது.

தமிழகத்திலேயே உற்பத்தியாகி இங்கேயே கடல் சேர்கிற மிக வைகை ஆற்றின் நீளம் 258 கி.மீ. பாசனப் பரப்பு 7031 ச.கி.மீ. இது தமிழகத்தின் நான்காவது பெரிய ஆறு ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலைதான் வைகை உற்பத்தியாகிற இடம். வருசநாடு, மேகமலை பகுதிதான் வைகையின் பிறப்பிடம். கடல் மட்டத்திலிருந்து 5,333 அடி உயரத்தில் இருக்கிற மேகமலையில் உள்ள ஒரு சிகரமான வெள்ளிமலையில்தான் அது உற்பத்தியாகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தைஒட்டியுள்ள மேகமலையின் விளம்பிலிருந்து இறங்கும் அம்மா கஜம் ஆறு வெள்ளிமலையாறுடன் இணைகிறது. இதனுடன் கூட்டாறு என்ற இடத்தில் உடங்கலாறும் சேர்ந்த பிறகுதான் வைகை, பெரிய ஆறாகிறது. மலையில் இருந்து இறங்கிய வைகையானது, வடக்கே பழனி குன்றுகளாலும் தெற்கே வருசநாடு குன்றுகளாலும் அரண் செய்யப்பட்டுள்ள கம்பம் பள்ளத்தாக்கை அடைகிறது. பின்னர் வருசநாடு குன்றுகளின் கிழக்கு மூலையை அடைந்ததும் தென் கிழக்காகத் திரும்பி மதுரை மாநகர் வழியாகப் பாய்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் பாக்கு நீரிணையில் கலக்கிறது

வைகை ஆற்றுப்படுகை

இவ்வாற்றுப் படுகை 9º 15’ மற்றும் 10º 20’ வடக்கு ரேகைக்கு இடையிலும், 77º 10’ மற்றும் 79º 05’ கிழக்கு ரேகைக்கு இடையிலும் அமைந்துள்ளது. மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் என மொத்தம் 7031 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. பெரியாறு அணை, வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, மருதநதி அணை, சாத்தையாறு அணை ஆகியவை இந்தப்படுகையில் உள்ள அணைகளாகும்.

துணை ஆறுகள்

சுருளியாறு, தேனியாறு, வட்டாறு, வராகநதி, மஞ்சளாறு, நாகலாறு, மருதநதி, சிறுமலையாறு, சாத்தையாறு முதலியவை வைகையின் துணை ஆறுகளாகும். பழனி மலையில் உற்பத்தியாகும் வராகநதி கொடைக்கானல் மலையிலிருந்து வரும் பாம்பாற்றுடன் (வெள்ளி அருவி உள்ள ஆறு) இணைந்து தேனிக்குக் கிழக்கே குன்னூருக்குத் தெற்கில் வைகையுடன் கலக்கிறது.

சுருளியாறு

பின்னர் முல்லையாறாகப் பயணித்து, இவ்வாறு பயணிக்கும் பொழுது சுருளியாறு இதனுடன் கலக்கிறது, பின்னர் வள்ளல் நதி என்று சொல்லப்படும் வருசநாட்டு பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் வள்ளல் நதியுடன் கலந்து வைகையாறாக வைகை அணையைச் சென்று அடைகிறது. மேலும் கொடைக்கானல் மலையிலிருந்து உருவாகும் ஆறுகளும் பெரியகுளம் வழியாகச் சென்று வைகை அணை முன்பு இந்த ஆற்றில் கலக்கிறது. அவ்வாறு கலக்கும் ஆறுகளில் மஞ்சளாறு, வராக நதி குறிப்பிடத்தக்கது ஆகும். 1895ல் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின்படி, கேரள, தமிழக எல்லையில் உற்பத்தியாகும் பெரியாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் (இந்த நீர் தேக்கம் ஆங்கில பொறியாளரான பென்னி குக்கு என்பவரால் தனது சொந்த பணத்தால் கட்டப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது) கட்டப்பட்டு ஒரு பகுதி நீர் மேற்கு மலைத் தொடர்ல் உருவாக்கப்பட்டுள்ள ஒரு குடைவின் மூலம் வைகையில் திருப்பிவிடப்படுகிறது.

வைகை அணை

கேரளா தமிழ்நாடு எல்லையில் உள்ள தேக்கடி என்னும் பெரியாறு தேக்கத்தில் தேக்கப்படுகிறது. இது கேரள தமிழ்நாடு எல்லையில் இருப்பதால் இரு மாநிலங்களுக்கிடையே முல்லைப் பெரியாறு பிரச்சனைத் தொடர்கிறது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து 7கி.மீ தொலைவில் உள்ள நரசிங்கபுரத்தில் வைகை அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் ஆழம் 21.64மீ (71அடி). மொத்த கொள்ளளவு 6091 மில்லியன் கன மீட்டர் (172 மில்லியன் கன அடி). நிலக்கோட்டை அருகில் உள்ள பேரணை, மதுரை விரகனூர் மதகு அணை, பார்த்திபனூர் அணைக்கட்டு போன்றவை வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குறிப்பிடத்தகுந்த பிற அணைகளாகும்.

வள்ளல் நதியும் வைகையும்:

வைகை ஆற்றுக்கு இரண்டு இடங்களில் இருந்து நீர் ஆதாரங்கள் கிடைக்கின்றது. அவற்றில் ஒன்று முல்லைப் பெரியாறு அணை. மற்றொன்று வருசநாடு பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் வள்ளல் ஆறு. இது அரசின் பேரேட்டில் மட்டுமே இவ்வாறு உள்ளது ஆனால் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த ஆற்றையும் வைகை ஆறு என்றே அழைக்கின்றனர். இந்தப் பகுதி மக்களுக்கு ஆறும் ஆற்றைச் சார்ந்த பகுதியும் (வேளாண் நிலங்களின் விளைபொருள்கள்) இவர்களின் வாழ்வாதரங்கள்.இங்கு உள்ள வேளாண் நிலங்கள் 90% கிணற்று-ஆற்றுப் பாசனத்தையும், 10% ஆற்றுப்பாசனத்தையும் நம்பி இருக்கின்றன.

1895-இல் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின்படி, கேரள, தமிழக எல்லையில் உற்பத்தியாகும் பெரியாற்றின்குறுக்கே முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டு ஒரு பகுதி நீர் மேற்குத் தொடர்ச்சி மலையில்உருவாக்கப்பட்டுள்ள ஒரு குடைவின் மூலம் வைகையில் திருப்பிவிடப்படுகிறது. இந்த அணை ஆங்கிலப் பொறியாளரான பென்னி குக் என்பவரால் தனது சொந்தப் பணத்தால் கட்டப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வைகை ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழா

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருமாலிருஞ்சோலை மணவாளனாகிய கள்ளழகர் மதுரைக்கு வந்து ஆற்றில் இறங்கி மகரிஷிக்குக் காட்சி தந்தபின் இருப்பிடம் சேர்கிறார். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் காட்சி பெருஞ்சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு மகிழ்கின்றனர். மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்தைக் காணவரும் அழகர் வைகை ஆற்றைக் கடந்து திருமணத்திற்கு செல்கையில், சில காரணங்களால் வைகை ஆற்றிலிருந்த படியே மீண்டும் தன் இருப்பிடம் சென்று விடுவார். அப்போது அங்கே அவருக்கு பல்வேறு ஆராதனைகளும், பக்தர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் அரங்கேறும்.

திருவிளையாடற்புராணத்தில் வைகை

திருவிளையாடல் புராணத்தில் மதுரை காண்டத்தில் எட்டாம் படலத்தில் வைகை ஆற்றை அழைத்த தொன்மம் கூறப்படுகிறது. வைகையோடு தொடர்புடைய புராணக் கதைகள் பல உள்ளன. அவற்றில் ஒன்று மதுரை மீனாட்சியம்மன் திருமணம். மீனாட்சி தனது திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் உண்டு மகிழ மலைமலையாக சமைத்து குவிக்கச் செய்தாள். ஆனால், மீனாட்சி-சிவபெருமானின் திருமணத்தைக் கண்டு மகிழ்ந்ததைப் போலவே மனமும், வயிறும் நிறைந்துவிட்டது. சமைத்த உணவு அப்படியே இருந்தது. மீனாட்சி அதை சுந்தரேசரிடம் தெரிவித்தாள். சுந்தரேசர் தனது பூத கணத்தைச் சேர்ந்த குண்டோதரனை அனுப்பினார். அவன் அவை அனைத்தையும் ஒரு நொடியில் உண்டு தீர்த்தான். அடுத்து தண்ணீர் கேட்டான். அங்கிருந்த கிணறு, குளம், குட்டை நீரை எல்லாம் அருந்திய பின்னும் அவனது தாகம் அடங்கவில்லை. அவன் சிவபெருமானிடம் முறையிட்டான். சிவபெருமான் கங்கையை பெருகிவரும் படிச் செய்தார். குண்டோதரன் அந்த வெள்ளத்தில் கைகளை வைத்து தடுத்து அப்படியே குடித்தான். தாகம் அடங்கியது. அப்படி அவன் கையை வைத்துக் குடித்ததால் அந்த ஆறு வைகை ஆனதென்பர். ஆண்டவன் அன்னை மீனாட்சியின் பொருட்டு வெள்ளம் பெருகி வரச் செய்ததைப் போலவே அடியவர் வரலாற்றில் வைகையை பெருகிவரச் செய்து திருவிளையாடல் பரிந்தான். அது ஆயிரக்கணக்கானவர்கள் போற்றிபாடும் வரலாறாக அமைந்துவிட்டது. அந்த அடியவரே மாணிக்கவாசகர் என்ற வாதவூரர் ஆவார்.

அரிமர்த்தன பாண்டியன் மதுரையை ஆண்டு வந்தான். அவனிடம் வாதவூரர் மந்திரியாக இருந்தார். ஒரு சமயம் தனது படை பலத்தைப் பெருக்க குதிரைகள் வாங்க எண்ணினான். மந்திரியாரிடம் பெரும் பொருள் கொடுத்து குதிரை வாங்கி வரும்படி அனுப்பினான். குதிரை வாங்கச் சென்ற வாதவூரர் திருப்பெருந்துறையை அடைந்தபோது இறைவன் அவரை ஆட்கொண்டான். அவர் அளப்பரிய ஞானத்தை அடைந்தார். அரசன் கொடுத்த பெரும் பணத்தை கோயில் கட்டவும் அடியவர்களுக்கு அமுதிடவும் செலவழித்தார்.

ஒற்றர்கள் மூலம் இதை அறிந்த மன்னன், அவருக்கு ஓலை அனுப்பி விரைவில் குதிரைகளுடன் திரும்புக என ஆணையிட்டான். வதவூரர் நிலையைக் கண்டு கலங்கினார். இறைவன், அவரை மன்னரிடம் சென்று ஆவணி மூல நட்சத்திர நாளில் குதிரைகள் வரும் என்று சொல்லும் படிக் கூறி விலையுயர்ந்த மாணிக்கமொன்றை அளித்து அதை மன்னனுக்குப் பரிசாக வழங்கும்படி கூறினார். வாதவூரர் மதுரைக்குத் திரும்பிவந்து மன்னனிடம் குதிரைகள் ஆவணி மூல நட்சத்திர நாளில் வரும் என்றார்.

இறைவன் அனுப்பிவைத்த குதிரைகளாக்கப்பட்ட நரிகளை மன்னனிடம் அளித்ததும், அவை அன்றிரவு மீண்டும் நரிகளாகி ஓடிவிட்டதும், வெகுண்ட மன்னன் வாதவூரரைச் சிறையில் அடைத்ததும், இறைவன் வைகையைப் பெருகி வரச் செய்ததையும், வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்த கரையடைக்கும் பணிக்கு இறைவன் கூலியாளாய் வந்ததும், வந்தி என்பவள் தந்த பிட்டுக்காக மண் சுமந்ததுமாகத் திருவிளையாடல் புரிந்து பாண்டியனிடம் பிரம்படிபட்டதும் திருவிளையாடல் புராணத்தில் வைகையை அழைத்த படலம். பிட்டுக்கு மண் சுமந்த படலம் போன்றவற்றில் வைகை பெரும் சிறப்புடன் போற்றப்படுகிறது.

புராணங்கள் “வைகை“ என வழங்கப்படும் இந்த ஆற்றை பழந்தமிழ் இலக்கியங்கள் “வையை“ என்று அழைக்கின்றன. ‘வை + ஐ’ என்பதே வையை ஆனதென்பர். “வை“ என்பதற்கு “பெருஞ்சிறப்பு மிக்கது“ என்று தமிழ் பேரகராதி பொருள் தருகிறது. இதிலிருந்துதான் வையகம், வைகல், வைகறை முதலிய சொற்கள் தோன்றின என்பர். பாண்டிய மன்னர்கள் வையையாற்றை பெருஞ்சிறப்புடன் போற்றினர். வையை என்னும் பொய்யாக் குலக்கொடி என்று போற்றப்படுகிறது.

வைகை ஆற்றங்கரை நகரங்கள் மற்றும் ஊர்கள்

சோழவந்தான், மதுரை, கீழடி, கொந்தகை, அகரம், திருப்புவனம், மானாமதுரை, பார்த்திபனூர், பரமக்குடி, போகலூர், இராமநாதபுரம், அழகன்குளம் ஆகியன வரலாற்றுச் சிறப்பிடம் பெற்ற இடங்களாகும்.

வைகை ஆற்றின் கரையிலுள்ள சிவத்தலங்கள் பலவாகும். அவற்றில் பாடல் பெற்றவை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில். திருஆப்புடையாற் கோயில், திருப்பூவனம் முதலியனவாகும். மானாமதுரை, பரமக்குடி முதலிய நகரங்களும் வைகையாற்றங் கரையில் உள்ள புகழ்பெற்ற நகரங்களாகும். சோழவந்தானுக்கு அருகில் உள்ள திருவேடகம் தலம் வையை ஆற்றுடன் தொடர்புடையது. கீழடி, கொந்தகை, அகரம் அகழாய்வுகள் வைகை ஆற்றங்கரையில் நடைபெற்று வருகின்றன. இவை நகர நாகரிகங்களாக அகழாய்வு தொல்பொருட்கள் மூலம் அறியப்பட்டுள்ளன. திருப்புவனம் பாடல்பெற்ற தலமாகும். இங்கு நீர்த் தொடர்பான ஈமச்சடங்குகள் வைகை ஆற்றில் செய்யப்பட்டு நீத்தார் வழிபாடு நடைபெறுகின்றது. மதுரை ஆற்றில் கள்ளழகர் விழா காண்பது போலவே மானாமதுரையில் சுந்தரவரதரும், பரமக்குடியில் அழகரும் வைகையாற்றில் இறங்கும் விழா நடைபெற்று வருகின்றது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகன்குளம் பண்டையத் தமிழகத் துறைமுகமாகும்.இங்கு நடைபெற்ற அகழாய்வுகளில் யவனதேசங்களுடன் கொண்டிருந்த வாணிபத் தொடர்பை அறியமுடிகிறது.

மதுரை வைகைக் கரைக் கல்வெட்டு

1961ஆம் ஆண்டில் வைகைக் கரையில் கண்டறியப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தின் அருங்காட்சியகத்தில் பாதுகாப்புடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இக்கல்வெட்டு 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

இந்தக் கல்வெட்டில் உள்ள வாசகம்
1) “பாண்டிய குலமணி பிரதீபனாய் ப்ராதுர் பாவஞ் செ
2) ய்து விக்ரமங்களாலரை சடக்கி மறங்
3) கெடுத் தறம்பெருக்கி அக்ரஹாரம் பல
4) செய்த பரிமரிதமாகிய ஹிரண்யகர்ப கோ
5) ஸகஸ்ர துலாபாரத்து மஹாதாநங்களாற்
6) கலிகடிந்து மங்கலபுந் நகரமாக்கி வீ
7) ற்றிருந்து செங்கோடைவா நின்ற கோச்சே
8) ந்தன் மாறனைம் பதாவது ராஜ்ய ஸம்வத்ஸர
9) ஞ் செல்லா நிற்க வைகை சொம்மதகு ப
10) டுத் தரிகேஸரியா னென்ப பியரிட்டு காறொடு
11) வித்து காஞண்தை இடை அடைத்து சாழ்நாட்டு
12) பருத்திக்குடி நாட்டு”

சேந்தன் மாறன் என்ற மன்னன் ஜம்பதாவது ஆட்சியாண்டில் அரிகேசன் என்ற தன் பெயரால் வைகை ஆற்றில் மதகு அமைத்து பாசன வசதி செய்துள்ளது அறிய வருகிறது.

இலக்கியங்களில் வைகை

பாண்டிய நாட்டின் குலக்கொடியான வையை பாண்டிய மன்னர்கள் சிறப்புடன் போற்றினர். புறப்பாடல் ஒன்றில் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்வஞ்சினம் உரைக்கையில் ”வையை சூழ்ந்த இவ்வளநாட்டை ஆளாமல் போவேன் ஆக” என்று சூளுரைக்கிறான். அப்படிச் செய்யாவிட்டால், விரும்பிப் பார்க்கும் இவளை (என் மனைவியை)ப் பிரிவேன் ஆகுக. என் அவைக்களம் அறநிலை திரியாதது. அதில் திறமில்லாத ஒருவனை நடுவராக அமர்த்தி வலிமை இல்லாத ஆட்சி புரிபவன் ஆவேன் ஆகுக. மையல் அரசன் மாவன், கோட்டைக் காவலன் ஆந்தை, உரையாற்றல் மிக்க புலவன் அந்துவன் சாத்தன், ஆதன் அழிசி, வெஞ்சின வீரன் இயக்கன் ஆகிய ஐந்து நண்பர்களோடும் (ஐம்பெருங்குழு) பிறரோடும், கண் போன்ற நட்புறவாளர்களோடும் கூடி மகிழ்ந்து வையை சூழ்ந்த நாட்டை ஆளும் மகிழ்ச்சியை இழப்பேன் ஆகுக. இது ஒன்று மட்டும் அன்று. உலக உயிரினங்களையெல்லாம் (மன்பதை) காக்கும் தென்புலங் காவல் பாண்டியன் குடியில் பிறக்காமல் மேட்டுத்தரிசு நிலங்களைக் காக்கும் அற்பக் குடியில் பிறப்பேன் ஆகுக.” என்று வஞ்சினம் உரைத்ததைக் கீழ்க்கண்ட பாடல் அதனை விளக்குகிறது.

”மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து,
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து
என்னொடு பொருந்தும் என்ப ; அவரை
ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு
அவர்ப்புறம் காணேன் ஆயின் - சிறந்த 5
பேரமர் உண்கண் இவளினும் பிரிக:
அறன்நிலை திரிய அன்பின் அவையத்துத்,
திறன்இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ்
வையை சூழ்ந்த வலங்கெழு வைப்பின் 10
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனும், மன்எயில் ஆந்தையும், உரைசால்
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,
வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும்,
கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த 15
இன்களி மகிழ்நகை இழுக்கிய யான் ஒன்றோ,
மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலம் காவலின் ஒரிஇப், பிறர்
வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே!

சங்க இலக்கியங்களில் ஒன்றான எட்டுத்தொகையில் ஐந்தாவதாக இடம் பெற்றுள்ள நூல், பரிபாடல் ஆகும். இதில் இருபத்தாறு பாடல்களில் வையை புகழ்ந்து பாடப்பட்டுள்ளன. இப்பாடல்கள் முழுவதுமாகக் கிடைக்கவில்லை. இப்போது 22 பாடல்களே கிடைத்துள்ளன. இவற்றில் 6, 7, 11, 12, 16, 20, 22 ஆகிய ஏழு பாடல்கள் வையையைப் போற்றுகின்றன.

இப்பாடல்களில் பெரிய மழை பொழிந்து வையையில் புதுவெள்ளம் வரும்போது மக்கள் வையை ஆற்றை வணங்கவும், அதில் ஓடம் செலுத்தி மகிழவும், நீராடவும், கரை களில் இன்பப் பொழுதுபோக்கவும், மக்கள் திரண்டு வந்த காட்சிகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. ஆற்றில் அடித்துவிடப்படும் மலர்கள், நீராடும் பெண்கள் சூடிக் களைந்த மலர்கள் போன்றவை நிறைந்து வருவது அது பூவாறாகத் தோற்றுவிக்கிறது.

பெண்களும் ஆடவர்களும் புரியும் காதல், அவர்களிடையே நடக்கும் ஊடல், கூடல் ஆகியவை உயிரோவியமாகச் சொல்லோவியத்தால் தீட்டப்பட்டுள்ளன. சங்கத்தமிழ் நூல்களில் ஒன்றான பத்துப்பாட்டில் திருமால், முருகன் ஆகியோரைப் புகழ்ந்த நெடும்பாடல்களைப் பாடி நெடும் பாடல்களோடு வையை ஆற்றையும் புகழ்ந்து பாடிய நெடும் பாடலும் இடம் பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வையையின் பெருமைகளை விரிவாகக் கூறுகின்றார்.

பரிபாடலில் வையை ஆற்றினை வணங்க வருபவர்கள் அந்த வையை தேவியை வழிபட்டபின், ஆற்றில் பூக்கள் அவி (நிவேதனம்) ஆகியவற்றுடன் பொன்னாலான மீன்களை விட்டு வழிபட்டனர் என்று செய்தி சொல்லப்பட்டுள்ளது. நிஜ மீன்களுடன் இந்தப் பொன்மீன்களும் ஆற்று வெள்ளத்தில் காணப்பட்டன. வைகையில் பல விதமான ஓடங்கள் செலுத்தப்பட்டதையும் அவற்றில் சிறப்பாக புலிமுக ஓடம், பள்ளி ஓடம் சிங்கமுக ஓடம் போன்றவை இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இப்படி ஒரு ஆற்றில் புதுப்புனல் பொங்கும் வேளையில் நடைபெறும் நிகழ்வை குறிக்கும் வகையில் பாடப்பட்ட ஆறு, வையை மட்டுமே அகும். வையை, மதுரையைச் சுற்றிச் சூழ்ந்து செல்கிறது. அதில் பல துறைகள் இருந்தன. அவற்றில் முதன்மை பெற்றதாக இருந்த மருதந்துறையில் பெரிய திருமால் ஆலயம் இருந்தது. இவருக்கு மருதந்துறை ஆழ்வார் என்பது பெயராகும். இப்போதுள்ள கூடலழகர் கோயிலையே ஆழ்வார் கோயில் எனவும் கூறுவர். பரிபாடலில் இருந்த வளமுடையார் என்று போற்றப்படும் கோயில் இதுவே என்பர். சிலப்பதிகாரத்திலும் இந்த வளமுடையார் திருமால் ஆலயம் சிறப்புடன் பேசப்பட்டுள்ளது.

வைகையாறு தமிழ் சுரந்து பெருமை பெற்றதை இரண்டு வரலாறுகள் விரிவாகக் கூறுகின்றன. அதில் முதல் வரலாறு திருஞானசம்பந்தர் வரலாற்றோடு தொடர்புடையது. சமணம் செல்வாக்கு பெற்றிருந்த மதுரையில் சைவத்தை நிலைநாட்ட ஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தார். அப்போது அவருக்கும் சமணர்களுக்கும் இடையே வாதங்கள் நிகழ்ந்தன. அப்போட்டிகளில் இறுதியாக அமைந்தது புனல்வாதமாகும். புனல்வாதம் என்பது என்ன? தத்தம் சமய உண்மைகளை எழுதிய ஏடுகளை ஓடும் நீரில் இடுவார்கள். அவ்ஏட்டில் எழுதியிருப்பது மேன்மையானதாக இருந்தால் அந்த ஏடு நீரை எதிர்த்து நீந்திச்செல்லும். இல்லையேல் நின்று மிதக்கவும் மாட்டாமல் ஆற்றின் வேகத்தில் அடித்துக்கொண்டு ஓடிவிடும். இந்த வகையில் சமணர்களும் திருஞானசம்பந்தரும் தமது ஏடுகளை வைகையில் இட்டனர். சமணர் ஏடுகள் ஆற்று வெள்ளத்தோடு ஓடி மறைந்தன. திருஞானசம்பந்தர் இட்ட ஏடு நீரைக் கிழித்துக்கொண்டு எதிர்நீச்சலாய் விரைந்தது. அந்த ஏடு தங்கிய இடமே இந்நாளில் திருஏடகம் என்று அழைக்கப்படுகிறது.

பாண்டியன் அரசவையில் எண்ணாயிரம் சமண முனிவர்கள் இருந்தனர். ஒருசமயம் மன்னனுக்கு நெருக்கடி உண்டானது. தாங்கள் அவனுக்குச் சுமையாக இருக்க விரும்பாத சமண முனிவர்கள் ஒன்றுகூடி மதுரையை விட்டு வெளியே சென்று சிலகாலம் தங்கியிருந்து நிலைமை சுமுகமானதும் திரும்பிவிடலாம் என்று முடிவெடுத்தனர். அதைக் கூறினால் மன்னன் அன்பின் மிகுதியால் அனுமதிக்க மாட்டான் என்று கருதிய அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பாடலை எழுதித் தமது ஆசனத்தின்கீழ் வைத்துவிட்டு இரவோடு இரவாக வெளியூர் சென்றுவிட்டனர். மறுநாள் அவர்கள் மதுரையை விட்டு வெளியேறி விட்டதை அறிந்த மன்னன் வருந்தினான். அப்போது சேவகர்கள் முனிவர்களின் பாடல்கள் எழுதிய ஓலைகளைக் கொண்டு வந்து அளித்தனர். மன்னன் அவற்றை வைகை ஆற்றில் விட்டுவிடும்படி கூறினான். ஏவலர்கள் அப்படியே செய்தனர். அவர்கள் இட்ட ஏடுகளில் 400 ஏடுகள் நீரை எதிர்த்துச் சென்று கரை சேர்ந்ததைக் கண்டு வியந்தனர். அவற்றைத் திரட்டி வந்து மன்னனிடம் அளித்தனர். விவரம் அறிந்த மன்னன் அப்பாடல்களின் தெய்வத்தன்மையை உணர்ந்து, பதுமனார் என்பவரிடம் அளித்து தொகுக்கும்படி கூறினான். அதுவே நாலடியார் என்னும் நூலாகும். நாலடியால் ஆன பாடல்களைக் கொண்ட அந்நூல் ஓர் என்னும் சிறப்பு விகுதி பெற்று நாலடியார் என்று அழைக்கப்படுகிறது. தமிழர்கள் பெரிதும் போற்றும் அறவுரை நூலாக இது திகழ்கிறது.

பெரும்பாலும் ஆறுகள் மலைகளில் தோன்றி சமவெளிகளில் பாய்ந்து சுற்று வட்டாரத்தை வளப்படுத்தியபின் தனியாகவோ, பேராறோடு இணைந்தோ கடலை அடையும். ஆனால், வைகை கடலை அடையாத ஆறு. அது ஏன் கடலை அடையவில்லை என்பதற்கு கவிஞர் ஒரு கற்பனையான காரணத்தைப் பாட்டாகக் கூறினார். பெருந்தொகை என்னும் நூலில் இடம்பெற்றுள்ள அப்பாடல்:

”நாரி இடப்பாகர்க்கு
நஞ்சளித்த பாவி என்று
வாரி இடம் போகாத வையையே
இடத்தும் வலத்தும்
இருபுறத்தும் நடக்கும்
பாண்டி வளநாடு”

பராசக்தியைத் தமது இடப் பாகத்தில் கொண்ட பரமசிவனுக்கு இந்தக் கடல், அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் கூடிக் கடைந்த வேளையில் விஷத்தைக் கொடுத்தது. அதனால் இந்தக் கடலை அடைதல் பாவம் என்பதால் வையை கடலை அடையவில்லை என போற்றிப் புகழ்ந்துரைக்கப்படுகின்றது.

தமிழ் இலக்கியத்தில் வெகுவாக வைகை புகழப்பட்டுள்ளது."வையை என்னும் பொய்யாக் குலக்கொடி", "ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை" என்பன போன்ற தொடர்கள் நிலவுகின்றன. வடமொழி நூல்கள் வைகை ஆற்றை "கிருதமாலா" ஆறு என்று குறிக்கின்றன. இபின் பட்டுடாவாலும் மார்க்கோபோலோவாலும் வைகை ஆறு குறிப்பிடப்பட்டுள்ளது.

”.குண கடல் கொண்டு குட கடல் முற்றி
இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது
அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டி
கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப
கழை வளர் சாரல் களிற்று இனம் நடுங்க
வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து
சிதரல் பெரும் பெயல் சிறத்தலின் தாங்காது
குண கடற்கு இவர்தரும் குரூஉப் புனல் உந்தி
நிவந்து செல் நீத்தம் குளம் கொளச் சாற்றி
களிறு மாய்க்கும் கதிர் கழனி ”
மதுரைக் காஞ்சி 238 - 247

கீழ்க்கடலில் நீரை முகந்து மேலைக்கடலை வளைத்து, இரவென்றும் பகலென்றும் அறிந்துகொள்ள இடமின்றி, மேடு பள்ளங்கள் எல்லாவற்றிலும் நீர் திரண்டு குவிந்து, கவலைக்கிழங்கு எடுத்த குழிகளில் அருவிநீர் விழுந்து ஒலிக்க, மூங்கில் வளர்ந்த மலைச்சரிவுகளில் யானைகள் நடுங்கிநிற்க, மலை அடிவாரத்தில் முழங்கும் இடிகளோடே முகில்கள் பரவி, சிதறுதலையுடைய பெரு மழை மிகுதலால், பெருக்கெடுத்து, கீழ்க்கடலுக்குப் பரவிச் செல்லும் கலங்கல் நிறத்தையுடைய மழைநீர், முனைந்து ஓங்கிச் செல்லும் வெள்ளம் குளங்கள் கொள்ளும்படி நிறைப்ப, யானையை மறைக்கும் கதிர்களைக் கொண்ட வயல்களிலும் வைகை ஆறு நிறைந்து செல்வதாகப் பாடப்பட்டுள்ளது.

”வையை” எனும் சொல் பயின்று வரும் தமிழ் இலக்கியங்கள்

அகநானூற்றில் 3 இடங்களிலும், புறநானூற்றில் 1 இடத்திலும், கலித்தொகையில் 10 இடங்களிலும், மதுரைக்காஞ்சியில் 2 இடங்களிலும், முத்தொள்ளாயிரத்தில் 2 இடங்களிலும், கல்லாடத்தில் 10 இடங்களிலும், பாண்டிக்கோவையில் 17 இடங்களிலும், பரிபாடலில் 50 இடங்களிலும் ”வையை” என்னும் ஆறு குறிப்பிடப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பூவணம் தலத்தைப் பாடும் தேவாரப்பாடல் வையை ஆறு குறிப்பிடப்படுகிறது.

”போரார்மதமா உரிவைபோர்த்துப்
பொடியணி மேனியனாய்க்
காரார் கடலின் நஞ்சமுண்ட
கண்ணுதல் விண்ணவனூர்
பாரார் வைகைப் புனல்வாய்பரப்பிப்
பன்மணி பொன்கொழித்துச்
சீரார்வாரி சேரநின்ற
தென்திருப் பூவணமே.”

மாடவீதி மன்னிலங்கை
மன்னனை மாண்பழித்துக்
கூடவென்றி வாள்கொடுத்தாள்
கொள்கையி னார்க்கிடமாம்
பாடலோடும் ஆடலோங்கிப்
பன்மணி பொன்கொழித்து
ஓடநீரால் வைகைசூழும்
உயர்திருப் பூவணமே

பொய்யாவேத நாவினானும்
பூமகள் காதலனும்
கையால்தொழுது கழல்கள்போற்றக்
கனலெரி யானவனூர்
மையார்பொழிலின் வண்டுபாட
வைகை மணிகொழித்துச்
செய்யார்கமலம் தேன்அரும்புந்
தென்திருப் பூவணமே.
-திருப்பூவணம் பதிகம்-முதல் திருமுறை

மதுரைக்கு அருகிலுள்ள திருவேடகம் என்னும் வைகை ஆற்றங்கரைத் தலத்தைப் பாடிள்ள திருஞானசம்பந்தர் வைகையின் வடகரையில் திருவேடகம் அமைந்துள்ளதைக் குறிப்பிடுகிறார்

”பொய்கையின் பொழிலுறு
புதுமலர்த் தென்றலார்
வைகையின் வடகரை
மருவிய ஏடகத்
தையனை அடிபணிந்
தரற்றுமின் அடர்தரும்
வெய்யவன் பிணிகெட
வீடெளி தாகுமே.”
திருவேடகம் பதிகம்-மூன்றாம் திருமுறை

சமணரை வாதில் வெல்ல திருவுள்ளங்கொண்டு சிவபெருமான் அருளிட ஆலவாய் தலத்தில் இப்பதிகத்தை சம்பந்தர் பாடுகிறார். இதில் வையை ஆறு பூம்புனல் என வருணிக்கப்படுகிறது.

கழிக்க ரைப்படு
மீன்கவர் வாரமண்
அழிப்ப ரையழிக்
கத்திரு வுள்ளமே
தெழிக்கும் பூம்புனல்
சூழ்திரு ஆலவாய்
மழுப்ப டையுடை
மைந்தனே நல்கிட”
திருஆலவாய்ப் பதிகம்-மூன்றாம் திருமுறை