பாரில் வழங்கும் பன்னூறு மொழிகளுள் முன்னைப் பழமொழிகள் மிகச்சிலவே. அவற்றுள்ளும் முன்னைப் பழமொழியாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் மொழி தன்னேரிலாத தமிழாகும். இளமையழகும் இனிமை நலமும் இறைமை நறுமணமும் என்றும் குன்றாது நின்று நிலவும் இயல்புடையது இம்மொழி. அதனாலேயே இதனைக் ‘கன்னித்தமிழ்’ என்று கற்றோர் போற்றுவர்.
கன்னித்தமிழைப் புலவர் ஒருவர் கதிரவனுக்கு ஒப்பிட்டார். கதிரவன் காலையில் உதயவெற்பில் உதிக்கிறான்; உயர்ந்தோர் உவந்து வணங்குமாறு வானில் ஒளி வீசுகிறான்; உலகிற் சூழும் புறவிருளையும் போக்குகிறான். அத்தகைய கதிரவனைப் போலக் கன்னித் தமிழும் பொதிய வெற்பில் பூத்து வருகிறது; கற்றுண்ர்ந்தோர் கடவுள் தன்மை வாய்ந்த மொழி யென வணங்கி வாழ்த்த விளங்குகிறது; உலக மக்களின் அகவிருளையும் ஒழிக்கின்றது; ஆதலின் ஒளியால் தன்னேரிலாத கதிரவனைப் போன்று, உயர்தனிச் செம்மையால் தன்னேரிலாது விளங்கும் தன்மையது. தமிழென்றார் அப்புலவர்.
“ஓங்கல் இடைவந்(து) உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும்-ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிர்ஒன்(று) ஏனைய
தன்னேர் இலாத தமிழ்.”
என்பது அப் புலவரின் பாடல்.
இம்மொழி, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன் தோன்றி மூத்த பழங்குடியினரால் பேசப்படும் பெருமை வாய்ந்தது. படைப்புக் காலங் தொட்டு மேம்பட்டு வந்த முடிமன்னர் மூவரால் பேணி வளர்க்கப்பெற்றது. எல்லையறு பரம்பொருள், பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும், தான் முன் இருந்தபடியே என்றும் யாதொரு மாறுபாடுமின்றி இருந்து வருகிறது. அஃதேபோல் நந்தம் செந்தமிழும் எந்த மாறுபாடுமின்றி என்றும் கன்னிமையோடு நின்று நிலவுகின்றது.