சங்க காலம்

பாரில் வழங்கும் பன்னூறு மொழிகளுள் முன்னைப் பழமொழிகள் மிகச்சிலவே. அவற்றுள்ளும் முன்னைப் பழமொழியாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் மொழி தன்னேரிலாத தமிழாகும். இளமையழகும் இனிமை நலமும் இறைமை நறுமணமும் என்றும் குன்றாது நின்று நிலவும் இயல்புடையது இம்மொழி. அதனாலேயே இதனைக் ‘கன்னித்தமிழ்’ என்று கற்றோர் போற்றுவர்.

கதிரவனும் கன்னித்தமிழும்

கன்னித்தமிழைப் புலவர் ஒருவர் கதிரவனுக்கு ஒப்பிட்டார். கதிரவன் காலையில் உதயவெற்பில் உதிக்கிறான்; உயர்ந்தோர் உவந்து வணங்குமாறு வானில் ஒளி வீசுகிறான்; உலகிற் சூழும் புறவிருளையும் போக்குகிறான். அத்தகைய கதிரவனைப் போலக் கன்னித் தமிழும் பொதிய வெற்பில் பூத்து வருகிறது; கற்றுண்ர்ந்தோர் கடவுள் தன்மை வாய்ந்த மொழி யென வணங்கி வாழ்த்த விளங்குகிறது; உலக மக்களின் அகவிருளையும் ஒழிக்கின்றது; ஆதலின் ஒளியால் தன்னேரிலாத கதிரவனைப் போன்று, உயர்தனிச் செம்மையால் தன்னேரிலாது விளங்கும் தன்மையது. தமிழென்றார் அப்புலவர்.

“ஓங்கல் இடைவந்(து) உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும்-ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிர்ஒன்(று) ஏனைய
தன்னேர் இலாத தமிழ்.”

என்பது அப் புலவரின் பாடல்.

தமிழின் தொன்மை

இம்மொழி, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன் தோன்றி மூத்த பழங்குடியினரால் பேசப்படும் பெருமை வாய்ந்தது. படைப்புக் காலங் தொட்டு மேம்பட்டு வந்த முடிமன்னர் மூவரால் பேணி வளர்க்கப்பெற்றது. எல்லையறு பரம்பொருள், பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும், தான் முன் இருந்தபடியே என்றும் யாதொரு மாறுபாடுமின்றி இருந்து வருகிறது. அஃதேபோல் நந்தம் செந்தமிழும் எந்த மாறுபாடுமின்றி என்றும் கன்னிமையோடு நின்று நிலவுகின்றது.

தமிழின் சீரிளமைத்திறம்

தாய்மொழியாகிய இத்தமிழிலிருந்து கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் சேய் மொழிகளாகத் தோன்றியுள்ளன. பல சேய்களே ஈன்றும் தாய்த்தமிழ் இளமைகெட்டு முதுமையுற்று வளமையற்றுப் போகவில்லை. இதனோடு ஒருங்கு வைத்து எண்ணப்பெறும் உயர்தனிச் செம்மொழிகளாகிய வடமொழி, எபிரேயம், இலத்தீன் ஆகியவற்றைப் போன்று உலகவழக்கு அழிந்து ஒழிந்து சிதைந்துபோகவில்லை. என்றும் மாறாத சீரிளமைத் திறத்தோடு விளங்குகின்ற இம்மொழி. இவ்வுண்மையைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை,

‘'ஆரியம்போல் உலகவழக்(கு) அழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே ‘’

என்று விளக்கினார்.

தமிழ் உயர்தனிச் செம்மொழி

உலக வழக்கில் பண்டுபோல் இன்றும் நின்று உலவிவரும் உயர் தனிச் செம்மொழி தமிழ். ஒரு காட்டில் வழங்கும் மொழிகள் பலவற்றுள்ளும் தலையாயதும், அவற்றினும் மிக்க தகையாயதுமான மொழியே உயர்மொழியாகும். பிற மொழிகளின் துணையின்றித் தனித்தியங்க வல்ல ஆற்றல்சான்ற மொழியே தனி மொழியாகும். திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூயமொழியே செம்மொழியாகும். இம்மூன்று இயல்புகளும் தன்னகத்தே கொண்ட தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழியன்றோ !

தமிழ் என்ற பெயரமைதி

தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்பதே பொருள். இனிமையே இயல்பாக அமைந்த இம்மொழிக்குத் தமிழ் என்ற பெயர் எத்துணைப் பொருத்தமானது! மேலும், தமிழ் என்ற சொல் தனித்தியங்கும் திறத்தையுடையது என்ற கருத்தைக் கொண்டதாகும். எழுத்துக்கள் வன்மை, மென்மை, இடைமையாகிய மூவகை ஓசைகளுடன் உச்சரிக்கப்பெறுவன என்பதைப் புலப்படுத்துவது போன்று த, ம, ழ என்ற மூவின எழுத்துக்களும் அப்பெயரிலேயே அமைந்துள்ளமை ஒரு தனிச்சிறப்பாகும். மெய்யெழுத்தாக நிற்கும்போது புள்ளியுடன் விளங்கிய எழுத்து, அகர உயிருடன் சேரும்போது புள்ளி நீங்குவதன்றி எந்த வேறுபாடும் எய்துவதில்லை என்பதை விளக்குவது 'தமிழ்’ என்ற சொல்லின் முதலெழுத்தாகும். இரண்டாம் எழுத்து, மெய் அகரமல்லாத பிற உயிர்களுடன் சேருங்கால் உருவில் வேறுபடும் என்பதை விளக்கியது. மெய்யெழுத்து இத்தகையது என்பதைக் காட்டி நிற்பது மூன்றாம் எழுத்து. எனவே தமிழ் நெடுங்கணக்கு உயிர், மெய், உயிர்மெய் என்ற பாகுபாடுகளையுடையது என்றும், மெய்யெழுத்துக்கள் ஓசையால் மூவகையின என்றும், ‘தமிழ்’ என்ற பெயரே விளக்கி நிற்றல் உணர்ந்து இன்புறத்தக்கதாகும். தமிழுக்கே உரிய ழகர மெய்யைத் தன்பால் கொண்டிருப்பதும் மற்றாெரு சிறப்பாகும். எழுத்துக்களுக்கு உயிர், மெய் என்ற பெயர்களே அமைத்து, எழுத்தைப் பயிலும்போதே தத்துவ உணர்வையும் புகுத்த முனைந்த நம் முன்னோரின் நன்னோக்கினை என்னென்பது!

தமிழ் அமிழ்து

மூவாமைக்கும் சாவாமைக்கும் காரணமாவது அமிழ்து. அது மிகவும் சுவையானதொரு பொருள். மிகுந்த சுவையுடைய நம் மொழியினுக்குப் பெயரமைக்கப் புகுந்த முன்னோர் ‘அமிழ்து’ என்றே அமைத்துவிட்டனர். அதுவே பின்னாளில் தமிழ் என்று மருவிவிட்டது என்றும் கூறுவர். இதன்கண் அமைந்த அமிழ்தனைய இனிமையைக் கண்ட ஆன்றோர் இதனை வாளா கூறாது செந்தமிழ், பைந்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ், இன்றமிழ், தீந்தமிழ் என்று அடைமொழி கொடுத்தே வழங்கி வந்துள்ளனர். கவியரசராகிய கம்பநாடர், தமது இராமாயணத்தில் அயோத்தி நகரைக் குறிக்குமிடத்து,

‘‘செவ்விய மதுரஞ் சேர்ந்தநற் றமிழில்
சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய
கவிஞர் அனைவரும் வடநூல்
முனிவரும் புகழ்ந்தது‘‘

என்று பாடியுள்ளார். இங்கு எத்தனை அடைமொழிகளுடன் தமிழ் சிறப்பிக்கப்பெற்றுள்ளது! செம்மை, இனிமை, நன்மை ஆகிய மூன்று அடைமொழிகளால் தமிழைப் பாராட்டுகிறார் கம்பர்

தமிழும் குமரகுருபரரும்

நெல்லை நாட்டின் தெய்வக் கவிஞராகிய குமரகுருபரர் தாம் பாடிய முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழில் நம் மொழியின் இனிமையைத் தித்திக்கப் பேசுந்திறம் தமிழர் சித்தத்தை இன்பவெள்ளத்தில் ஆழ்த்துவதாகும். முத்தமிழ்க் கடவுளாகிய முத்துக்குமரனின் செங்கனிவாயில் பசுந்தமிழின் நறுமணம் கமழ்கின்றதாம். அம்முருகவேளும் சங்கத்தில் புலவனாக வீற்றிருந்து தமிழை ஆய்ந்தான் என்பர். ஆதலின் அவன் சங்கப் புலவர்கள் வகுத்தமைத்த துங்கத் தமிழ் நூல்களைத் திருவாயால் ஓதிய அருளாளன் ஆவான். அவர்கள் வகுத்த தமிழ் நூல்கள் தீஞ்சுவைக் கனியும் தண்டேன் நறையும் வடித்தெடுத்த சாரம் அத்தகைய தமிழ் மணம், முருகன் திருவாயில் கமழ்ந் தூறுகின்றது என்று குமரகுருபரர் கூறியருளினார்.

‘’ முதற்சங்கத் தலைப்பா வலர் தீஞ் சுவைக்கனியும்
தண்டேன் நறையும் வடித்தெடுத்த சாரங் கனிந்தூற் றிருந்தபசுங் தமிழும் நாற ‘‘

என்பது அவர் பாடற் பகுதியாகும். இப்புலவர் தாம் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அம்மையைத் தமிழ்ச்சுவையாகவே கண்டு உள்ளம் தழைக்கின்றார், “நறை பழுத்தி துறைத்தீந்தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே!"’ என்று மீனாட்சியம்மையை அவர் விளிக்குங்திறத்தால் தமிழின் இனிமையையும் அவ்வினிமைக்குக் காரணமான அகத்துறை, புறத்துறைகளையும் குறித்தருளினர்.

ஒண்டீந்தமிழ்

பிற மொழிகள் எல்லாம் எழுத்தும் சொல்லும் பற்றிய இலக்கணங்களேயே பெற்றிருக்கவும், தமிழ் ஒன்றுமட்டும் பொருள் இலக்கணமும் பெற்றுப் பொலிகின்றது. மக்கள் வாழ்வியலை வகுத்துரைக்கும் அப்பொருள் இலக்கணம் அகம், புறம் என்னும் இரு பகுதிகளையுடையது. காதல் கனியும் அகவாழ்வும் வீரம் சொரியும் புறவாழ்வும் பொருள் இலக்கணத்தால் போற்றியுரைக்கப்பெறுவனவாகும். இவையே அகத்துறை, புறத்துறை யெனப்பட்டன.

புறத்துறை இலக்கண இலக்கியங்களால் புகழும், அகத்துறை இலக்கண இலக்கியங்களால் இனிமையும் பெற்று விளங்கும் தமிழின் பெற்றியை மாணிக்கவாசகர் “ஒண்டீந்தமிழ்” என்ற தொடரால் குறித்தருளினர். அவரும் கூடலில் திகழ்ந்த தமிழ்ச் சங்கத்தில் சிவபெருமான் புலவனாக அமர்ந்து செந்தமிழாய்ந்த திறத்தைக் குறித்துள்ளார்.

“சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்
பலத்துமென் சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதில் கூடலின்
ஆய்ந்தஒண் டீந்தமிழ்”

என்பது அவர் அருளிய திருக்கோவையார்ப் பாடல் அடிகளாகும்.

வில்லி சொல்லுவது

பாரதம் பாடிய நல்லிசைக் கவிஞராகிய வில்லிபுத்தூரார் தமிழ்மொழியாகிய நங்கை பிறந்து வளர்ந்த பெற்றியை ஒரு பாடலில் அழகுறப் பேசுகின்றார். அவள் பொருப்பிலே பிறந்தாள் ; தென்னன் புகழிலே கிடந்தாள் ; சங்கப்பலகையில் அமர்ந்தாள் ; வையையாற்றில் இட்ட பசுந்தமிழ் ஏட்டில் தவழ்ந்தாள் ; மதுரையில் நிகழ்ந்த அனல் வாதத்தின்போது நெருப்பிலே நின்றாள் ; கற்றாேர் நினைவிலே நடந்தாள் ; நிலவுலகில் பயின்றாள் ; இன்று தமிழர் மருங்கிலே வளர்கின்றாள் என்று குறித்தார் அப்புலவர்.

பரஞ்சோதியார் பாராட்டுவது

திருவிளையாடற் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் தமிழின் சிறப்பைத் தக்கவாறு குறிப்பிடுகின்றார். “கண்ணுதற் கடவுளும் கழகத்தில் கவிஞனாக வீற்றிருந்து கன்னித்தமிழைப் பண்ணுறத் தெரிந்தாய்ந்தான்; அத்தகைய அருந்தமிழ் சிறந்த இலக்கண வரம்பையுடையது; மண்ணுலகில் வழங்கும் இலக்கண வரம்பில்லாத பிற மொழிகளுடன் ஒருங்கு வைத்தெண்னும் இயல்புடையதன்று” என்று இயம்பியுள்ளார். மேலும், அச்சிவபெருமான் தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற்றம்பலவனாகத் திகழ்வதற்கும் தீந்தமிழ்ச் சுவையே காரணம் என்று கூறிப்போந்தார். கயிலையில் ஆடிய கூத்தன் ஆலங்காட்டு மணிமன்றத்திலும், தில்லைப் பொன்னம்பலத்திலும், ஆலவாய் வெள்ளியம்பலத்திலும், நெல்வேலிச் செப்பறையிலும், குற்றாலச் சித்திரமன்றிலுமாகத் தென்றிசை நோக்கி ஆடிக்கொண்டே தமிழ்ச்சுவை நாடி வந்தான் என்று பாடினார் பரஞ்சோதி முனிவர். அவ்விறைவன் இடையறாது ஆடுவதால் ஏற்படும் இளைப்பையும் களைப்பையும் போக்கும் மருந்து, அருந்தமிழும் நறுந்தென்றலும் என்று நினைந்தான்.

"கடுக்க வின்பெறு கண்டனும் தென்றிசை நோக்கி
அடுக்க வந்துவந் தாடுவான் ஆடலின் இளைப்பு
விடுக்க வாரமென் கால்திரு முகத்திடை வீசி
மடுக்க வுந்தமிழ் திருச்செவி மாந்தவும் அன்றோ !”

என்பது பரஞ்சோதி முனிவரின் பாடல்.

அற்புதம் விளைத்த அருந்தமிழ்

இறைவனும் விரும்பிய இன்பத்தமிழ் தனது தெய்வத்தன்மையால் பற்பல அற்புதங்களையும் ஆற்றியுள்ளது. சுந்தரர் பாடிய செந்தமிழ்ப் பாடலில் சிந்தை சொக்கிய சிவபெருமான், அவர்பொருட்டுத் திருவாரூரில் பரவையார் திருமனைக்கு நள்ளிருளில் இருமுறை தூது சென்று வந்தான். அவிநாசித் தலத்தில் முதலையுண்ட பாலனை மீண்டும் உயிர்பெற்று வருமாறு செய்தது அச்சுந்தரர் பாடிய செந்தமிழே. எலும்பைப் பெண்ணுருவாக்கியது சம்பந்தரின் பண்ணமைந்த ஞானத்தமிழ். திருமறைக்காட்டில் அடைபட்டுக் கிடந்த திருக்கோவில் கதவங்களைத் திறந்தது நாவுக்கரசரின் நற்றமிழ். இன்னும் எண்ணிலா அற்புதங்கள் பண்ணமைந்த தமிழால் நிகழ்ந்தன.

பாரதியும் பைந்தமிழும்

இத்தகைய தெய்வநலங்கனிந்த தீந்தமிழின் சிறப்பை இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் புலவர்களும் பாடிக் களிக்கின்றனர். தேசீயக் கவிஞராகிய பாரதியார் பன்மொழியறிந்த பைந்தமிழ்ப் புலவர். அவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று வியந்தோதினர். இளங்குழந்தைக்குத் தமிழின் சிறப்பைக் கூற விரும்பிய அப் புலவர், சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே-அதனைத்-தொழுது படித்திடுக ” என்று அன்போடு எடுத்துரைத்தார்.

பாரதிதாசனாரும் பைந்தமிழும்

தமிழின் இனிமையைப் பகரவந்த பாரதிதாசனார், “முதிர்ந்த பலாச்சுளையும் முற்றிய கரும்பின் சாறும் பனிமலர்த்தேனும் பாகின்சுவையும் பசுவின் பாலும் இளநீரும் தமிழின் இனிமைக்கு ஒப்பாக மாட்டா” என்று உரைத்தார்.

"தமிழுக்கு அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !”

என்று இன்பக் கூத்தாடுகின்றார்.

திருக்குறளும் தொல்காப்பியமும்

இத்தகைய தமிழ் ஆயுந்தொறும் ஆயுந்தொறும் அளவிலாத இன்பந்தரும் இயல்புடையது என்று போற்றினார் பொய்யாமொழிப் புலவர். ஆய்தொறும் இன்பூட்டும் அரிய நூல்கள் பல இம்மொழியில் தோன்றியுள்ளன. அவற்றுள் தலையாயது உலகப் பொதுமறையாகிய திருக்குறள் நூலாகும் ; தொன்மை வாய்ந்தது ஒல்காப் புகழ் படைத்த தொல்காப்பியம் என்னும் இலக்கணப் பெருநூலாகும். மொழிநலம் குன்றாது காத்துநிற்கும் மொய்ம்புடையது தொல் காப்பியம். தமிழ் நலத்தை வையம் அறியச்செய்து வான்புகழைத் தேடித்தந்தது திருக்குறள். இதனைப் பாரதியார்,

"வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என்று வாயார வாழ்த்தினார். இத்திருக்குறள் ஒன்றே தமிழைத் தன்னேரிலாத தனிப்பெருமையுடைய மொழி என்று போற்றப் போதியதாகும்.

தமிழ் வளர்த்த சங்கங்கள்

தொன்மையும் தூய்மையும் இனிமையும் வளமையும் ஆகிய கலங்களால் தன்னேரிலாது விளங்கும் தமிழைப் பல்லாயிரம் ஆண்டுகளாகக் காத்து வளர்த்த காவலர் பாண்டிய மன்னர்களாவர். தமிழகத்தையாண்ட முடிவேந்தர் மூவரும் தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் பேணிவந்தனராயினும் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்க்கே உரியதாகும். அதனால் பாண்டிய நாட்டைத் ‘தமிழ்ப் பாண்டி நாடு’ என்றும், அந்நாட்டின் தலைநகராகிய மதுரையினைத் தமிழ் மதுரையென்றும் புலவர்கள் போற்றுவர். “தண்ணர் தமிழளிக்கும் தண்பாண்டி நாடு” என்றே மாணிக்கவாசகர் பாண்டியநாட்டைப் பாராட்டினர். மணிமேகலை ஆசிரியர் “தென்தமிழ் மதுரை” யென்றே மதுரையைக் குறிப்பிட்டார். ‘தமிழ் கெழுகூடல்’ என்று புறநானூறு புகழ்கிறது.

சங்கம் பற்றிய சான்றுகள்

பாண்டிய மன்னர்கள் பைந்தமிழை வளர்த்தற்கென அமைத்த சங்கங்கள் மூன்று. அவை தலை, இடை, கடை யெனக் குறிக்கப்பெறும். இம்மூன்று சங்கங்களைப் பற்றிய வரலாற்றை இறையனார் களவியல் பாயிர உரையாலும், தொல்காப்பிய உரையாசிரியர்களின் உரைக் குறிப்புக்களாலும், சில சங்க இலக்கிய உரைகளாலும் ஒருவாறு அறியலாம். இவற்றுள் இறையனார் களவியல் உரையே சங்க வரலாற்றைச் சற்று விரிவாக எடுத்துரைக்கின்றது. இவ்வுரை பதினோராம் நூற்றாண்டில் எழுதப்பெற்றதே யெனினும் கருத்துக்கள் அனைத்தும் கடைச்சங்கத் தலைமைப் புலவராகிய நக்கீரனாருடையனவே என்பதில் ஐயமில்லை. இக்களவியல் உரை, சங்கம் இருந்த நகரங்களையும் அவற்றை நிறுவிய பாண்டியர்களையும், அவற்றில் இருந்து தமிழாய்ந்த புலவர்களையும், ஒவ்வொரு சங்கத்திற்கும் உரிய புலவர்களின் தொகையையும், சங்கம் நடைபெற்ற ஆண்டுகளின் அளவையும், முதலிரு சங்கங்கள் நிலவிய நகரங்கள் கடல்கோளால் அழிந்ததையும் எடுத்துரைக்கும் திறம் வரலாற்று முறைக்கு மிகவும் பொருத்தமாகவே இருக்கின்றது. அதனாலேயே இவ்வரலாற்றில் நம்பிக்கை கொண்ட பண்டை உரையாசிரியர்கள் பலரும் தத்தம் உரையகத்தே இவ் வரலாற்றுக் குறிப்புக்களை இடையிடையே எடுத்துக்காட்டினர்.

தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவராகிய பேராசிரியர், “தலைச் சங்கத்தாரும் இடைச் சங்கத்தாரும் இவ்விலக்கணத்தால் செய்யுள் செய்தார்”, “அவ்வழக்கு நூல் பற்றியல்லது மூன்றுவகைச் சங்கத்தாரும் செய்யுள் செய்திலர்” என்று கூறும் உரைகளுள் களவியல் உரையிற் காணும் சங்க வரலாற்றுக் குறிப்புக்களைக் காண்கிறோம்.

உரையாசிரியராகிய உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் தாம் வரைந்துள்ள தொல்காப்பிய உரைக்கண், “அவ்வாசிரியராவார், அகத்தியனாரும் மார்க்கண்டேயனாரும் தலைச்சங்கத்தாரும் முதலியோர்” என்றும், புறத்திணையியல் உரையில், "தமிழ்ச் செய்யுட் கண்ணும், இறையனாரும் அகத்தியனாரும் போல்வார் செய்தன தலையும், இடைச் சங்கத்தார் செய்தன இடையும், கடைச்சங்கத்தார் செய்தன கடையுமாகக் கொள்க” என்றும் கூறுமாற்றான் களவியல் உரைக்குறிப்புக்களை அவர் எடுத்தாளுந்திறம் புலனாகின்றது.

தலை இடைச் சங்கங்கள்

சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார், தம் உரைக்கண், “இரண்டாம் ஊழியதாகிய கபாடபுரத்தின் இடைச்சங்கம்” என்றும், “கடைச்சங்க மிரீஇய பாண்டியருள் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார் செய்த மதிவாணனார் நாடகத் தமிழ் நூல்” என்றும், “முதலூழி இறுதிக்கண் தென்மதுரை யகத்துத் தலைச்சங்கம்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரது உரைப்பகுதியில் முதலிடைச் சங்கங்கள் இருந்த நகரங்களும் கவியரங்கேறிய பாண்டியர்களும் குறிக்கப் பெற்றிருத்தலைக் காணலாம்.

"இவ்வகை யரசரிற் கவியரங்கேறினார்
ஐவகை யரசர் ஆயிடைச் சங்கம்
விண்ணகம் பரவும் மேதகு கீர்த்திக்
கண்ணகன் பரப்பிற் கபாடபுர மென்ப”

என்ற பழைய பாட்டானும் கபாடபுரத்தில் சங்கமிருந்த செய்தி அறியப்படுகின்றது. சேக்கிழார் பெருமானும் தாம் இயற்றிய தெய்வத்தன்மை வாய்ந்த பெரியபுராணத்தில், “சாலுமேன்மையிற் றலைச்சங்கப் புலவனார் தம்முள்” என்று தலைச்சங்கப் புலவரைக் குறித்துள்ளார். இடை கடைச் சங்கங்கள்

கடைச்சங்கப் புலவருள் ஒருவராய மாங்குடி மருதனார் தாம் பாடிய மதுரைக் காஞ்சியில் முதலிடைச் சங்கங்களைப் பற்றிய செய்திகள் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்:

"தென்னவற் பெயரிய துன்னருந் துப்பில்
தொன்முது கடவுட் பின்னர் மேய
வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந,”

"தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலங்தரு திருவின் நெடியோன் போல”

என வரும் மதுரைக்காஞ்சி அடிகளால் பாண்டியன் ஒருவன் அகத்தியரைத் தலைவராகக்கொண்டு முதற் சங்கத்தை நிறுவித் தானும் அச்சங்கத்தில் அகத்தியருக்கு அடுத்து வீற்றிருந்த செய்தியும், நிலந்தரு திருவின் நெடியோனாகிய முடத்திருமாறன் இடைச்சங்கம் நிறுவிப் புலவர்களைக் கூட்டித் தமிழாய்ந்த செய்தியும் விளக்கமாகின்றன.

இடைச்சங்கக் கபாடபுரம்

இடைச்சங்கம் இருந்த கபாடபுரத்தைப் பற்றிய செய்தி, வான்மீகி இராமாயணத்திலும் வியாச பாரதத்திலும் சுட்டப்பட்டுள்ளது. தென்பாற் செல்லும் வாணர வீரர்க்குச் சொல்லும் இராமன் வார்த்தைகளாக, ‘வானர வீரர்களே! பொன் மயமானதும் அழகானதும் முத்துக்களால் அணி செய்யப்பட்டதும் பாண்டியர்க்கு உரிய தகுதியுடையதுமான கபாடபுரத்தைக் காணக் கடவீர்!’ என்று வான்மீகியார் குறிப்பிட்டுள்ளார். வியாசர் தம் பாரத நூலுள், ஒரு பாண்டியன், தன் தந்தையைக் கொன்று கபாடபுரத்தை அழித்த கண்ணனையும் கடிமதில் துவாரகையையும் அழிப்பதற்குப் படையெடுத்த செய்தி யொன்றைக் குறிப்பிட்டுள்ளார். சாணக்கியர் தம் பொருள் நூலில் முத்தின் வகைகளைப் பற்றி மொழியுமிடத்துக் கபாடபுரத் துறையில் குளித்த முத்தின் வகையைப் பாண்டிய கவாடகம் என்று பகர்ந்துள்ளார்.

மதுரையில் கடைச்சங்கம்

இச்செய்திகளால் இடைச்சங்கம் இருந்த கபாடபுரம் இராமாயண காலத்திலும் பாரத காலத்திலும் சீரிய நிலையில் இருந்த செய்தி தெளிவாகின்றது. முதற் சங்கம் விளங்கிய தென்மதுரையும் இடைச்சங்கம் இருந்த கபாடபுரமும் கடல்கோளால் அழிந்தபின்னர், இந்நாளில் உள்ள மதுரை மாநகரில் கடைச்சங்கம் நிறுவப்பெற்ற செய்தி, பல புலவர்களால் கூறப்படுகின்றது. மதுரை மாநகரில் இயற்றமிழ்ச் சங்கமும் இசைத்தமிழ்ச் சங்கமும் இலங்கிய செய்தியை மாணிக்கவாசகர் தம் திருக்கோவையார் நூலில் குறிக்கின்றார்,

"சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்
பலத்துமென் சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதில் கூடலின்
ஆய்ந்தஒண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோ? அன்றி
ஏழிசைச் சூழல்புக்கோ?
இறைவா! தடவரைத் தோட்கென்
கொலாம்புகுந் தெய்தியதே.”

இப்பாடலில் கூடலெனப் பெயர் வழங்கும் மதுரைமாநகரில் தமிழ்ப் புலவர்கள் சங்கமிருந்து தமிழ்க்கலைத் துறைகளே ஆராய்ந்த செய்தி கூறப்படு கின்றது. ஏழாம் நூற்றாண்டில் திகழ்ந்த திருநாவுக்கரசர், ‘நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக்கு அருளினேன் காண்’ என்று தருமிக்குப் பொற்கிழியளித்த வரலாற்றைத் தம் தேவாரப் பாடலில் குறிப்பிடுகின்றார். இச் செய்திகளால் கடைச்சங்கம் இன்றைய மதுரைமாநகரில் இலங்கியதென்பதும் விளங்குகிறது.

களவியல் உரையில் தலைச்சங்க வரலாறு

இறையனார் களவியல் உரையால் காணலாகும் முச்சங்கச் செய்திகளைச் சிறிது நோக்குவோம். பழந்தமிழ்நாடு இந்நாள் உள்ள கடற்குமரித் துறைக்குத் தெற்கே பன்னூறு கல் தொலைவு பரவியிருந்தது. அது பண்டைநாளில் குமரிநாடு முதலாக நாற்பத்தொன்பது நாடுகளாகப் பிரிந்திருந்தது. அப் பகுதியில் விளங்கிய தென்மதுரையே பாண்டியர்களின் முதற் கோநகரம் ஆகும். அந்நகரில்தான் பாண்டியர்கள் தலைச்சங்கத்தை நிறுவித் தமிழை வளர்த்தனர். இம் முதற்சங்கத்தை நிறுவியவன் காய்சினவழுதி என்னும் பாண்டிய மன்னன். இதன்கண் அகத்தியனார், முரஞ்சியூர், முடிநாகராயர் முதலான ஐந்நூற்றுநாற்பத்தொன்பது புலவர்கள் வீற்றிருந்து தமிழை ஆராய்ந்தனர். அவர்களால் பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையும் போன்ற எண்ணிறந்த நூல்கள் ஆக்கப்பெற்றன. இச்சங்கம் நாலாயிரத்து நானூற்று நாற்பது ஆண்டுகள் நிலவியது. இதில் பாண்டியர் எழுவர் கவியரங்கேறினர். அவர்கட்கு இலக்கண நூல் அகத்தியமாகும். இச்சங்கத்தின் இறுதியில் இருந்தவன் கடுங்கோன் என்னும் பாண்டியன்.

இடைச்சங்க வரலாறு

தலைச்சங்கமிருந்த தென்மதுரை கடல்கோளால் அழிந்தபின், கடுங்கோன் என்னும் பாண்டியன் பஃறுளியாற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடையே இருந்த வளநாட்டில் கபாடபுரம் என்னும் நகரைத் தலைநகராக்கினான். அந்நகரில் மீண்டும் தமிழ்ச்சங்கத்தை நிறுவித் தமிழைப் புரந்தான். இதுவே இடைச்சங்கம் எனப்படும். இதன் கண் தொல்காப்பியர் முதலான பல புலவர்கள் வீற்றிருந்து தமிழாராய்ச்சி செய்தனர். இச்சங்கத்தில் ஐம்பத்தொன்பது புலவர்கள் சிறந்து விளங்கினர். அவர்களால் கலியும், குருகும், வெண் டாளியும், வியாழமாலை அகவலும் முதலான பல நூல்கள் பாடப்பெற்றன. அவர்கட்கு இலக்கணநூல் அகத்தியமும் தொல்காப்பியமும் ஆகும். இச்சங்கம் மூவாயிரத்து எழுநூறு ஆண்டுகள் விளங்கிற்று என்று ஆராய்ச்சியாளர் கூறுவர்.

கடைச்சங்க வரலாறு

பைந்தமிழை வளர்த்தற்காகப் பாண்டியர் அமைத்த சங்கங்களில் மூன்றாம் சங்கமாகிய கடைச் சங்கம் இன்றைய மதுரையிலேயே இருந்தது. “தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை” எனவரும் சிறுபாணுற்றுப்படை அடிகளால் இச்செய்தி வலியுறுவதாகும். இங்குத் ‘தமிழ் நிலை’ யென்று வரும் தொடர் தமிழ் நிலையமாகிய தமிழ்ச் சங்கத்தையே குறிப்பதாகும். இறையனர் களவியல் உரைப் பாயிரத்தால் கடைச்சங்கத்தைப் பற்றிய செய்திகள் விளக்கமாகத் தெரிகின்றன.

இன்றைய மதுரை மாநகரில் முடத்திருமாறன் என்னும் பாண்டியன் கடைச்சங்கத்தை நிறுவினன். இம்மதுரையில் மூன்றாம் சங்கமாகிய கடைச்சங்கத்தையும் நிறுவினான். இவன் கடல்கோளால் ஏற்பட்ட தன்னாட்டின் குறையை நிறைத்தற்குச் சேர சோழரோடு போர்புரிந்து அவர்கள் காட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றினான். அதனால் இவன் ‘நிலந்தரு திருவிற் பாண்டியன்’ என்று வியந்தேத்தும் சீர்த்தி பெற்றான். இவன் காலமுதல் இன்றைய தென்றமிழ் மதுரை, பாண்டிய நாட்டிற்கே யன்றிப்பைந்தமிழ் நாடு முழுமைக்கும் மொழி வளர்ச்சியில் முதன்மைபெற்றுத் திகழ்வதாயிற்று.

இதன்கண் மதுரைக் கணக்காயனர் மகனர் நக்கீரனர் முதலாக நாற்பத்தொன்பது புலவர்கள் இருந்து தமிழை ஆராய்ந்தனர். அவரை உள்ளிட்டு கானுாற்று நாற்பத்தொன்பது புலவர்கள் அச் சங்கத்தில் இருந்து தமிழை வளர்த்தனர். கடைச்சங்கத்தின் இறுதிக்காலத்தில் உக்கிரப்பெருவழுதி என்னும் பாண்டியன் விளங்கினான். அவன் புவியரசாகவும் கவியரசாக்வும் திகழ்ந்தான். இச் சங்கத்தில் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித் தொகை, பரிபாடல் ஆகிய தொகை நூல்கள் எட்டும் தோன்றின. பத்துப்பாட்டும் பதினெண்கீழ்க்கணக்கும் இச்சங்கத்தில்தான் எழுந்தன.

கடைச்சங்கத்தில் சிறுமேதாவியாரும், சேந்தம்பூதனாரும், அறிவுடையரனாரும், பெருங்குன்றூர்கிழாரும், இளந்திருமாறனும், மதுரையாசிரியர் நல்லந்துவனாரும், மதுரை மருதனிளநாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் முதலான நாற்பத்தொன்பது புலவர்கள் சிறந்து விளங்கினர். அவர்களால் நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, கற்றிணை நானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை முதலான எண்ணிறந்த நூல்கள் இயற்றப்பெற்றன. அவர்கட்கு அகத்தியமும் தொல்காப்பியமும் இலக்கண நூல்களாக விளங்கின. இச்சங்கம் ஆயிரத்து எண்ணூற்றைம்பது ஆண்டுகள் நின்று நிலவியது. இச்சங்கத்தின் இறுதிநாளில் விளங்கிய மன்னன் உக்கிரப்பெருவழுதி என்பான்.

கடற்கோள்களால் அழிந்த தமிழ்நூல்கள்

இறையனார் களவியல் உரைப் பாயிரத்தால் மூன்று சங்கங்களிலும் தோன்றிய நூல்கள் பலவற்றை அறிகின்றோம். அவற்றுள் முதற் சங்கத்தில் எழுந்த நூல்களுள் ஒன்றேனும் இன்று காணுதற்கில்லை. அச்சங்கத்தில் எழுந்த பேரிலக்கணமாகிய அகத்தியத்தின் ஒரு சில சூத்திரங்களையே உரைகளிடையே காணுகின்றோம். இடைச்சங்க நூல்களுள்ளும் தொல்காப்பியம் நீங்கலாக ஏனையவெல்லாம் கடலுக்கு இரையாயின. இச்செய்தியைக் குறித்து ஒரு புலவர் இரங்கிக்கூறும் பாடல் இங்கு எண்ணுதற்குரியது :

எண்ணுதற்குரியது :
"ஓரணம் உருவம் யோகம்
இசைகணக்(கு) இரதம் சாலம்
தாரண மறமே சந்தம்
தம்பம்நீர் நிலம் உலோகம்
மாரணம் பொருள்ளன் றின்ன
மான நூல் பலவும் வாரி
வாரணம் கொண்ட(து) அந்தோ!
வழிவழிப் பெயரும் மாள.”

இப் பாடலால் மூன்று சங்கங்களிலும் பல துறைக் கலைநூல்கள் அளவிலாது எழுந்தனவென்றும், அவற்றுட் பெரும்பாலன கடல்கோளால் அழிக்தொழிந்தன என்றும் அறிகின்றோம்.

சமண பெளத்த சங்கங்கள்

இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மன்னனாகிய உக்கிரப்பெருவழுதியின் காலத்திற்குப் பின்னர்த் தமிழ்ச்சங்கம் பேணுவாரின்றி மறைந்தொழிந்தது. ஐந்தாம் நூற்றாண்டில் சமணரும் பெளத்தரும் தமிழகத்தே புகுந்தனர். அவர்கள் தத்தம் சமயக் கொள்கைகளைப் பரப்புவதற்காகத் தமிழ்மதுரையில் சங்கங்களை அமைத்தனர். அவற்றின் வாயிலாக இலக்கண இலக்கிய நூல்கள் பல வெளிவந்தன. அவையனைத்தும் சமயச்சார்புடைய நூல்களாகவும் சமயக்கொள்கைகளைப் பரப்ப எழுந்த நூல்களாகவுமே விளங்கின.

நாலடியார் தோன்றிய நலம்

கடைச்சங்கத்திற்குப் பின்னர்ப் பன்னூறு ஆண்டுகளாக மதுரைமாங்கரில் தமிழ்ச்சங்கம் நிலவாதொழிந்தது. உக்கிரப்பெருவழுதியின் காலத்திற்குப் பின்னர் வந்த பாண்டிய மன்னர்கள் சங்கம் நிறுவித் தமிழை வளர்க்காது போயினர். ஐந்தாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் புகுந்த சமணரும் பெளத்தரும் தத்தம் சமயச் சார்புடைய சங்கங்களை மதுரை மாநகரில் தோற்றுவித்தனர். அவற்றின் வாயிலாகப் பல நூல்களே ஆக்கித் தமிழை வளர்த்தனர். ஏழாம் நூற்றாண்டில் மதுரைமாககரைச் சூழ்ந்து வாழ்ந்து வந்த எண்ணுயிரம் சமணர்கள் பாண்டியன் ஆதரவில் இருந்தனர். அவர்கள் அனைவரும் தமிழ்வல்ல புலவராய் விளங்கினர். அவர்கள் வடநாட்டிலிருந்து வற்கடம் காரணமாகத் தென்னடு புகுந்தவர். அவர்கள் தம் நாட்டில் மழைவளம் பொழிந்து செழித்ததும் மீண்டும் ஆங்குச் செல்லப் பாண்டியனிடம் விடை வேண்டினர்.

“உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்”

என்பார் திருவள்ளுள் கற்றவராகிய சமணர்களைப் பிரிவதற்கு மன்னன் பெரிதும் வருந்தினான். அவனது துயரத்தைக் கண்ட சமணர்கள் அவன்பால் சொல்லிக் கொள்ளாமலே நள்ளிருளில் தம் நாடுநோக்கி நடந்தனர். அவர்கள். மதுரைமாநகரை விட்டுப் புறப்படுங்கால் தாம் தங்கிய இடத்தில் தனித்தனியே ஒரு காலடிப் பாடலை ஏட்டில் எழுதிவைத்து மறைந்தனர். மறுகாட் காலையில் செய்தியறிந்த மன்னன் அவர்கள் இருந்த இடத்தை நேரில் சென்று கண்டான். ஆங்கு ஒவ்வொரு வரும் ஒவ்வொரு பாடலை எழுதிவைத்திருப்பதைக் கண்டு எடுத்து நோக்கினான். அவை ஒன்றோடொன்று தொடர்பில்லாதனவாய் இருத்தலைக் கண்டான். அவற்றையெல்லாம் எடுத்து வையையாற்று வெள்ளத்தில் வீசுமாறு பணித்தான். அங்ஙனமே ஏவலாளர் செய்தனர். ஆற்றில் எறிந்த ஏடுகளில் நானூறு ஏடுகள் மட்டும் வெள்ளத்தை எதிர்த்துக் கரை சேர்ந்தன. அவற்றை ஏவலாளர் ஒருங்குசேர்த்துப் பாண்டியனிடம் கொண்டுவந்து கொடுத்தனர். அவற்றை நோக்கிய போது அவை ஒன்றோடொன்று தொடர்பு கொண்டன வாய்த் தோன்றின. உடனே பதுமனார் என்னும் பைந்தமிழ்ப் புலவரைக் கொண்டு அந் நானூறு பாடல்களையும் வகைப்படுத்துத் தொகுத்தான். அதுவே நாலடி நானுறு என்றும் நாலடியார் என்றும் பெயர் பெற்றது. இந் நிகழ்ச்சி உக்கிரப்பெருவழுதியின் காலத்தே நிகழ்ந்தது என்று உரைப்பாரும் உளர். இதனை விளக்கும் பழைய பாடல் ஒன்று உள்ளது.

“மன்னன் வழுதியர்கோன் வையைப்பேர் ஆற்றின்
எண்ணி யிருநான்கோ டாயிரவர்-உன்னி
எழுதியிடும் எட்டில் எதிரே நடந்த
பழுதிலா காலடியைப் பார்.”

நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகச் சேர்க்கப்படினும் அது பிற்காலத்து எழுந்ததே. அது திருக்குறளுக்கு ஒப்பாக வைத்து மதிக்கப்பெறும் நீதிநூலாகும். அதனாலேயே திருக்குறளையும் நாலடியாரையும் சேர்த்துப் பாராட்டும் பழமொழிகள் எழலாயின. ‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி,’ ‘பழகுதமிழ்ச் சொல் லருமை நாலிரண்டில்’ என்னும் பழமொழிகள் அவ் உண்மையை நன்கு விளக்கும். இதனே, வேளாண் வேதம்’ என்றும் ஒதுவர். இந்நூல் மதுரைமாநகரில் எழுந்த மாண்புடையதே.

இறையனார் வளர்த்த இன்றமிழ்

மதுரைமாநகரில் எழுந்தருளிய சோம சுந்தரப்பெருமான் தன்னை வழிபட்ட தொண்டர் இருவர்க்குத் தண்டமிழ்ப் பாடல்கள் எழுதிக்கொடுத்தான். தருமி என்னும் அந்தணாளனுக்குப் பாண்டியன் சங்க மண்டபத்தில் தொங்கவிட்ட பொற்கிழியைப் பரிசாகப் பெறுதற்குரிய அரிய தமிழ்ப் பாடல் ஒன்றைப் பாடிக்கொடுத்தான். அது குறுந்தொகை என்னும் பழந்தமிழ் நூலில் இடம்பெற்றுள்ளது. கற்புடைய மகளிரின் கருங்கூந்தலுக்கு இயற்கையாகவே நறுமணமுண்டு என்று வலியுறுத்தும் அப் பாடல் ‘நலம் பாராட்டில்’ என்னும் அகத்துறையில் அமைந்த அழகிய பாடலாகும்.

மதுரைத் திருக்கோவிலில் நாளும் யாழிசையால் பண்ணமையப் பாடிப் பரவிய பாணபத்திரன் என்னும் யாழ்வல்ல தொண்டரின் வறுமையைப் போக்கப் பெருமான் திருவுளங் கொண்டான். அந்நாளில் சேர நாட்டை யாண்ட சிவபத்தனாகி ய சேரமான் பெருமாள் என்னும் மன்னர்பெருமானுக்குத் திருமுகம் கொடுத்தனுப்பினன். ஒலேயைத் திருமுகம் என்றுரைத்தல் மரபு. அத் திருமுகத்தில் எழுதப்பெற்ற பாடல் திருமுகப்பாசுரம் எனப்படும். இதனைப் பிற்காலத் தவர் சீட்டுக்கவி என்பர். இது சைவத் திருமுறைகளுள் ஒன்றாகிய பதினேராம் திருமுறையில் முதற் பாடலாக விளங்குகிறது.

பொருள் இலக்கணம் வல்ல புலவரைக் காணுேமே என்று கலங்கிய பாண்டியனது கலக்கத்தை யகற்றக் களவியல் இலக்கணத்தை மூன்று செப்பிதழகத்து எழுதிக்கொடுத்தான் ஆலவாய்க் கடவுள். அதுவே இறையனர் களவியல் என வழங்குவது.

குமரகுருபரர் வளர்த்த தமிழ்

முந்நூறு ஆண்டுகட்கு முன்னர்த் தென்பாண்டி நாட்டிலுள்ள திருவைகுண்டம் என்னும் பதியில் தோன்றியருளிய அருட் கவிஞராகிய குமரகுருபரர், மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சிபுரிந்த காலத்தில் இக் நகருக்கு எழுந்தருளினார். அவர் மதுரையின் தென்பால் அமைந்த திருப்பரங்குன்றில் எழுந்தருளிய செவ்வேளைப் பணிந்து ஆங்கிருக்கும்போது மதுரை மீனாட்சியம்மைமீது பிள்ளைத் தமிழ் நூலொன்று பாடினர். அதனை உணர்ந்த, மீனாட்சியம்மை, நாயக்க மன்னர் கனவில் தோன்றிக் குமரகுருபரரை அழைத்து வந்து பிள்ளைத்தமிழைத் தம் சந்நிதியில் அரங்கேற்று மாறு பணித்தருளினார்.

அவ்வாறே மறுநாட் காலையில் திருமலை நாயக்கர் பல்லக்கு ஒன்றை யனுப்பித் திருப்பரங்குன்றில் தங்கி யிருக்கும் அருட் கவிஞராகிய குமரகுருபரரை அழைத்து வருமாறு ஏவலரைப் பணித்தார். அவரை அன்புடன் வரவேற்று மீனாட்சியம்மையின் திருமுன்பு பிள்ளைத் தமிழ்நூலை அரங்கேற்றுமாறு பணிவுடன் வேண்டினார். பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் நடைபெற்றது.

மேலும், இவ் அருட்கவிஞர் மதுரையில் வாழ்ந்த நாளில் மதுரைக் கலம்பகம், மீனாட்சியம்மை குறம் மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை ஆகிய நூல்களையும் பாடித் தமிழை வளப்படுத்தினார்.

பரஞ்சோதியார் வளர்த்த பைந்தமிழ்

திருவிளையாடற் புராணத்தைப் பாடிய பரஞ்சோதி முனிவர் ஏறத்தாழ இருநூற்றைம்பது ஆண்டுகட்கு முற்பட்டவர்; வடமொழி தென்மொழிகளில் வல்லவர்; நுண்ணறிவும் நூலறிவும் படைத்தவர்; சிவபத்தியும் செந்தமிழ்க் கவிபாடும் திறனும் உடையவர். இவர் பிறவிக் கடலைக் கடத்தற்கு நன்னெறி காட்டும் ஞானசிரியரை நாடிச் சிவத்தலங்களைத் தரிசித்து வந்தார். சிவராசதானியாக விளங்கும் மதுரைமா நகரை அடைந்தார். இந்நகரில் சின்னாள் தங்கி அங்கயற்கண்ணியையும் சொக்கலிங்கப் பெருமானையும் வழிபட்டு வருங்காலத்தில் ஒருநாள் ஞானசிரியர் ஒருவரைத் தரிசித்து அவரை வணங்கி ஞானோபதேசம் பெற்றுச் சைவத் துறவு பூண்டு விளங்கினார்.

இவரது இருமொழிப் புலமையையும் வாக்கு நலத்தையும் கண்டுணர்ந்த மதுரைமாநகரப் பெருமக்கள் பலர் அவரைக் கண்டு அடிபணிந்து வடமொழியில் உள்ள ஆலாசிய மான்மியத்தைத் தமிழில் பாடித் தந்தருளுமாறு வேண்டினர். இவரும் அன்பர்களின் கருத்தை நிறைவேற்றும் மனத்தினராய் ஒருநாள் துயில் கொள்ளும்போது அங்கயற்கண்ணம்மை இவரது கனவில் தோன்றி, “நம் பெருமான் திருவிளையாடலைப் பாடுவாயாக!” என்று பணித்து மறைந்தருளினார். உடனே முனிவர் விழித்தெழுந்து மீனாட்சியம்மையின் திருவருளைச் சிந்தித்து வியந்து அவர் கட்டளைப்படியே ‘சத்தியாய்’ என்ற மங்கலச் சொல்லால் தொடங்கிக் சோமசுந்தரப்பெருமான் நிகழ்த்தியருளிய அறுபத்து கான்கு திருவிளையாடல்களையும் திருவிளையாடற் புராணமாகத் தெய்வ மணங்கமழும் பாக்களால் ஆக்கி யுதவினார். மேலும் இவர் திருவிளையாடற் புராணத்தின் சாரமாக ‘மதுரை அறுபத்து நான்கு திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா’ என்ற ஒரு சிறு நூலையும் மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி’ என்னும் சிறு பிரபந்தத்தையும் பாடியருளினார்.