சங்க கால பாண்டியர்

பாண்டியரைப்பற்றி ஓரளவு தெளிவான சான்றுகள் சங்ககாலம் முதற்கொண்டு கிடைக்கின்றன என்று முன்னர் குறித்தோம். சங்க இலக்கியங்களே இக்காலத்தில் சான்றாகத் துணைபுரிகின்றன. இவ்விலக்கியங்களின் காலம் சர்ச்சைக்குரியதெனினும் இவை குறிப்பிடும் வரலாறு சுமார் கி.பி.முதல் மூன்று நூற்றாண்டுகளுக்குரியது என்பது பொதுவாகப் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். சங்க நூல்களின் குறிப்புகளைக் கொண்டு பாண்டிய மன்னர்களின் வம்சாவளியையோ, முழுமையான வரலாற்று விவரங்களையோ அறிந்துகொள்வது சற்றுக்கடினமே. தொடர்பான வரலாற்றைக் கோர்வையாக எழுதுவதற்கான சிறப்பான வரலாற்று ஆதாரங்கள் என இவற்றை நாம் ஏற்க முடியாது. எனவே, இங்குச் சங்ககாலப் பாண்டி மன்னர்களைப் பற்றிய செய்திகள் தனித்தனியேயும் தொடர்பின்றியும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இம்மாதிரியான வகைப்படுத்துதல் வரலாற்றுக்கு ஒவ்வாததெனினும், இம்முறையேயன்றி இச்சான்றுகளைக் கொண்டு கோர்வையான வரலாறு எழுத இயலாது.

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்

தலைச்சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்தவனாகக் கருதப்படும் இப்பாண்டிய மன்னன் நெடியோன், நிலந்தரு திருவிற்பாண்டியன், பாண்டியன் மாகீர்த்திதேவன் எனவும் அழைக்கப்பட்டான். கடற்கோளால் இன்றைய குமரிக்குத் தென்பகுதியிலுள்ள நாட்டுப் பிரிவுகள் அழிவதற்கு முன்னர் பஃறுளி என்றதோர் ஆற்றை வெட்டுவித்தவன் என்றும், கடல் தெய்வத்திற்கு விழா வெடுத்தான் என்றும் புறநானூறு கூறும். தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இவ்வேந்தன் அவைக்களத்தே தொல்காப்பியம் அரங்கேற்றப்பெற்றதென மொழிகிறார். இம்மன்னன் மதுரையில் நடைபெற்றதான, திருவிளையாடல்களிலும் பங்கேற்றான் எனத் திருவிளையாடல் புராணம் குறிக்கும். இவனுக்குப் பிற்பட்ட காலத்தில் அளிக்கப்பட்ட வேள்விக்குடிச் செப்பேடுகளில் கடற்கோளால் உலகங்கள் அழிய ஒரு பாண்டிய மன்னன் மட்டும் உயிர் வாழ்ந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. சின்னமனூர்ச் செப்பேடுகளும் (இரண்டும்) பாண்டியன் கடல் மீது வேலெறிந்து பெரு வெள்ளத்தைத் தடுத்த கதையைக் கூறுகின்றன. இக்கதைகள், வடிம்பலம்ப நின்ற பாண்டியனைக் குறித்ததாகலாம் என்று வரலாற்றறிஞர் கருதுவர்.