கர்நாடகா மாநிலத்திலுள்ள சரவணபெலகோலா எனும் இடத்துக்கு பத்ரபாகு தலைமையில் இடம் பெயர்ந்த சமணர்களால் தென்னிந்தியாவில் சமணம் பரவியது என்று கூறப்படுகிறது. மதுரையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் சமணர்கள் தமது தனித்த வாழ்வை மேற்கொள்ளப் பொருத்தமான இடங்களாக விளங்கின. மதுரையைச் சுற்றி அமைந்திருந்த இயற்கையான பாறைக் குகைகளைத் தேர்வு செய்து குடியேறினர். இவ்வாறு பாறைகளைக் குடைந்து படுக்கைகள் அமைக்கப்பட்ட 14 குகைகளை, மதுரையைச் சுற்றி காண முடியும். இந்த மலைக்குகை பகுதிகளில் கி.மு.500 முதல் கி.பி.300 வரையிலான எழுத்தமைதியில் தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றுள் பழமையானது ஐந்து தமிழிக் கல்வெட்டுகளைக் கொண்டு திகழும் மாங்குளம் ஆகும்.
தமிழகத்தின் முதன்மையான நகரமாகவும் பாண்டிய நாட்டின் பழமையான தலைநகரமாகவும் இரண்டாயிரம் ஆண்டுகளாக விளங்கிவரும் இணையிலாப் பெருமையுடையது மதுரைமாநகரம். மதுரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுத் தொன்மையும், தொடர்ச்சியும் கொண்டது. மதுரையின் தொன்மையை இன்று கீழடி அகழாய்வுகள் மெல்ல, மெல்ல வெளிக்கொணர்ந்து வருகின்றன. அத்தோடு கூடவே, மதுரையின் தொன்மைக்கான சான்றுகளாகக் குகை ஓவியங்கள், சங்க இலக்கியங்கள், தமிழ்பிராமிக் கல்வெட்டுகள், வடமொழி மற்றும் பிறநாட்டு அறிஞர்களின் பயணக்குறிப்புகள், நாட்டுப்புறக் கதைகளும், பாடல்களும் என ஏராளம் இருக்கின்றன. மதுரை என்ற பெயரைக் குறிக்கும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமிக் கல்வெட்டு அழகர்கோயிலுக்கு அருகில் உள்ள கிடாரிப்பட்டி குன்றிலும், அணைப்பட்டி அருகிலுள்ள சித்தர்மலையிலும் பார்க்கலாம். மதுரைக்கு சமணர்களின் வருகை கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே இருந்திருக்க வேண்டும். திருப்பரங்குன்றம், யானைமலை, அழகர்மலை, கீழக்குயில்குடி சமணர்ம்லை, முத்துப்பட்டி, கொங்கர்புளியங்குளம், நடுமுதலைக்குளம், விக்கிரமங்கலம், சித்தர்மலை, அரிட்டாபட்டி, மாங்குளம், கீழவளவு, ஓவாமலை, வரிச்சியூர் என எண்பெருங்குன்றமான மதுரையின் குன்றுகளில் சமணர் வாழ்ந்திருக்கிறார்கள்.
மதிரை - மதிரைய் - மத்திரை
மேட்டுப்பட்டி சித்தர்மலையிலுள்ள தமிழ்-பிராமி கல்வெட்டில் மதுரை என்ற ஊர்ப்பெயர் ‘மதிர’ என்றொரு இடத்திலும், ‘மதிரை’ என்றொரு இடத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. அழகர் மலைக் கல்வெட்டில் 'மதிரய்’ என்றோரிடத்திலும் ‘மத்திரை’ என்று வேறோர் இடத்திலும் வெட்டப்பட்டுள்ளது. இலக்கியங்கள் இவ்வூரின் பெயரை மதுரையென்றும் கூடலென்றும் குறிப்பிடக் கல்வெட்டு ‘மதிரை’ என்றுரைப்பது கவனத்திற்குரியது. மதிலரண் மிக்க மாநகர் என்ற பொருளில் ’மதில்+ஐ' என்றழைக்கப்பட்டு மதிரை ஆகியிருக்கலாம்.