அண்மையில் தமிழர் பண்பாட்டு புகழ் பரப்பி வரும் கீழடி அகழாய்வு பகுதியானது 110 ஏக்கர் நிலப்பரப்பிற்கு மேல் அதிக சிதைவில்லாமல் தென்னந்தோப்புகளால் பாதுகாக்கப்பட்டு 9° 51’40"" வடக்கு அட்ச ரேகைக்கும், 78° 11’70"" கிழக்கு தீர்க்க ரேகைக்கும் இடையே அமையப் பெற்றுள்ள ஒரு தொன்மை நகரிய குடியிருப்பு மற்றும் தொழிற்கூடப் பகுதி ஆகும்.
தமிழகத்தின் ஒரு கோயில் நகரமாகத் திகழும் மதுரை நெடுஞ்சாலை வழியே கிழக்கு தென்கிழக்காக 13 கி.மீ. தொலைவில் கீழடி அமைந்துள்ளது. கீழடி அகழாய்வுப் பணியிடத்தின் வடக்கே 2 கி.மீ. தொலைவில் வைகை ஆறு செல்கிறது. கிழக்குப் பகுதியில் உள்ள மணலூர் கிராமத்தின் வடக்கில் ஒரு கண்மாய் அமைந்துள்ளது. வடகிழக்கில் உள்ள இயற்கை நீர்நிலையாக இது காட்சியளிக்கின்றது. இது போலவே அகரம் என்னும் ஊர் கீழடியின் தொல்லியல் மேட்டில் தென்கிழக்கே அமைந்துள்ளது. மேற்கே கொந்தகை என்னும் ஊர் ஓர் எல்லையாக விளங்குகிறது. இவ்வாறு சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் ஊரணிகள், கண்மாய்கள் என இயற்கை அரண்களாகப் பெற்று தொடக்க வரலாற்றுக் காலம் முதல் சமகாலம் வரை மனித வாழிடத்திற்கு உகந்ததாக திகழ்கிறது.
முந்தைய ஆண்டுகளில் (2014-15, 2015-16 மற்றும் 2016-17) இப்பகுதியில் மத்திய தொல்லியல் துறையின் அகழாய்வுப் பிரிவின், பெங்களூரு பிரிவு அகழாய்வு மேற்கொண்டது. கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வினை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2017-18 ஆம் ஆண்டு மேற்கொண்டது. கீழடியில் கண்டறியப்பட்ட அரும்பொருட்கள் மற்றும் தொல்பொருட்களின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஒரு விரிவான அகழாய்வினை மேற்கொண்டது. . 2018-2019 ஆம் ஆண்டு ஐந்தாம் கட்ட முறையான தொல்லியல் அகழாய்வானது நிறைவுப்பெற்றுள்ளது.